ரேஸுக்கு போறேன்!.. எனக்கு எதாவது நடந்தா!. மகிழ் திருமேனியிடம் அஜித் சொன்ன அந்த வார்த்தை!...

Ajithkumar: தமிழ் சினிமாவில் ஸ்டைலீசான ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். 10ம் வகுப்பை கூட பாதியில் விட்டுவிட்டு பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டியவர் இவர். சென்னை புதுப்பேட்டையில் இவரின் வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு பைக் பழுது பார்க்கும் பட்டறையில்தான் நாள் முழுவதும் இருப்பார். பைக்கை எப்படி பழுது பார்க்கிறார்கள்?. பைக்கை எப்படி ஓட்டுவது? போன்றவற்றை கற்றுக்கொள்வதில்தான் இவருக்கு அதிக ஆர்வம் இருந்திருக்கிறது.
சினிமா வாய்ப்பு: நண்பர்கள் சொன்னதால் மாடலிங் துறைக்கு போய் சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அமராவதி படத்தில் நடிக்க இயக்குனர் செல்வா அஜித்தை தேடி வந்த போது அந்த பைக் பட்டறையில்தான் இருந்தார். எனக்கு 40 ஆயிரம் சம்பளம் வேண்டும் என கேட்டார். அது கூட புதிதாக ஒரு பைக்கை வாங்கத்தான். அந்த காசில்தான் முதல் பைக்கை வாங்கினார் அஜித்.
பைக் ரேஸில் ஆர்வம்: சினிமாவை விட அஜித்துக்கு பைக் மற்றும் கார் ஓட்டுவதில் காதல் அதிகம். ஆனால், தொழில் என வந்துவிட்டால் சின்சிரியாக நடித்து கொடுத்துவிடுவார். அதை இப்போது வரைக்கும் பின்பற்றி வருகிறார். துவக்கத்தில் பைக் ரேஸ்களில் ஆர்வமாக கலந்து கொண்டார். ஆனால், விபத்தில் சிக்கி முதுகில் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அதை விட்டுவிட்டார்.
அஜித் கார் ரேஸ்: அதன்பின் கார் ரேஸில் கலந்துகொள்ள துவங்கினார். ஆனால், திருமணத்திற்கு பின் அவரின் மனைவி ஷாலினி அதை அனுமதிக்கவில்லை. இந்நிலையில்தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களை முடித்து கொடுத்துவிட்டு துபாயில் நடந்த கார் ரேஸுக்கு போனார். அவரின் டீமுக்கு அஜித்தே கேப்டனாக இருந்தார். போட்டியின் இறுதியில் அஜித்தின் டீம் 3வது இடத்தை பெற்று வெற்றி பெற்றது. இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.
கார் விபத்து: இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஓன்றில் பேசிய விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி ‘துபாய் கார் ரேஸில் கலந்துகொள்ள பயிற்சி எடுத்த போது அவரின் கார் விபத்தில் சிக்கி சுழன்றதை பார்த்து அதிர்ச்சி ஆனேன். எதுவுமே ஆகாதது போல எழுந்து நடந்து போனார். விடாமுயற்சி படம் முடிவடையும் நேரத்தில் என்னிடம் ‘மகிழ் நான் ரேஸுக்கு போறேன். அங்க எனக்கு என்ன வேணா நடக்கலாம். அதுக்குள்ள கமிட் பண்ண எல்லா படத்தையும் முடிச்சி கொடுக்கணும்னு நினைக்கிறேன். அப்பதான் என்னால 100 சதவீதம் ஆக்ஸிலரேட்டரை அழுத்த முடியும்.
இரண்டு படம் பெண்டிங் இருக்குன்னு பயந்து 90 சதவீதம் மட்டும் அழுத்தினா என்னால ரேஸுக்கு உண்மையா இருக்க முடியாது. அதோடு, என்னை நம்பி தயாரிப்பாளர்கள் பணம் போட்டிருக்கிறார்கள். அதில், பல தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது. கார் ரேஸுக்கு போனா அதுல 100 சதவீதம் என்னோட உழைப்பை நான் கொடுக்கணும். அதனால்தான் விடாமுயற்சி, குட் பேட் அக்லி இரண்டு படத்தையும் முடித்துவிட்டேன்’ என சொன்னர் அஜித். இப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்க்கிறது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.