Categories: Cinema News latest news movie stories sakthi thirumagan

Sakthithirumagan: சக்தி திருமகன் என்னோட கதை!.. சும்மா விட மாட்டேன்!.. இசையமைப்பாளர் புகார்..

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் சக்தி திருமகன். இந்த படத்தை அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியிருந்தார். பொலிட்டிக்கல் திரில்லராக வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. படத்தின் முதல் பாதி அசத்தலாக இருந்ததாகவும், அதே திரைக்கதையை இரண்டாம் பாதியில் கையாண்டிருந்தால் படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் என்றும் பலரும் சொன்னார்கள். சமீபத்தில் இப்படம் ஓடிடியிலும் வெளியானது. இந்நிலையில் சுபாஷ் சுந்தர் என்பவர் ‘சக்தி திருமகன் என்னுடைய கதை.. திருடிவிட்டார்கள்’ என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர் பாடல்களை உருவாக்கி முகநூலில் பகிர்ந்து வருகிறார்.

எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவன் இந்தியாவே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அந்த கதாபாத்திரத்தை வில்லனாக மாதவனை உருவகம் செய்து எழுதியிருந்தேன். ஹீரோவுக்கு வில்லன் எல்லாம் சொல்லிக் கொடுக்க ஒரு கட்டத்தில் ஹீரோ வில்லனுக்கு எதிராக திரும்புவான். 3 வருடங்களுக்கு முன்பு காப்பிரைட்ஸ் உரிமையை வாங்கிய கதைதான் ‘தலைவன்’. அதைத்தான் தற்போது சக்தி திருமகனாக எடுத்திருக்கிறார்கள்.இந்தப் படத்தின் கதையை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பினேன்.

அருண் பிரபு இயக்கிய அருவி படத்தை அந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது. புதிய இயக்குனர்கள் அனுப்பும் கதைகளை வாங்கி அதை வேறு வடிவமாக மாற்றி யாரிடம் கொடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதை நான் சும்மா விட மாட்டேன். கதையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்து படமாக எடுத்திருக்கிறார்கள்.

கதையை பதிவு செய்த எல்லா ஆதாரங்களும், ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன். இவ்வளவு பொருத்தங்களுடன் ஒருவரைப் போல ஒருவர் சிந்திக்க முடியாது. அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்தவருக்கே உரிமை’ என பொங்கி இருக்கிறார்.

அதோடு தான் கதையை பதிவு செய்து ஆவணங்களையும், கதையின் ஸ்னாப்சிஸ்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் ‘படம் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?’ என கேட்டதற்கு ‘இப்போதுதான் படத்தை ஓடிடியில் பார்த்தேன்’  சுபாஷ் சுந்தர் சொல்லி இருக்கிறார். ‘நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.. எந்திரன் பட கதை கூட வேறு ஒருவருடைய கதை என ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தார்கள். அதுபோல நீங்களும் வழக்கு தொடருங்கள்.. நியாயம் கிடைக்கும்’ என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் ’விஜய் ஆண்டனி நல்ல மனிதர்.. நீங்கள் அவரை நேரில் சந்தித்து பேசுங்கள்’ என்று சொல்ல ‘அதற்கு நான் முயற்சி செய்கிறேன்’ என சுபாஷ் சுந்தர் கூறியிருக்கிறார்.

Published by
ராம் சுதன்