அந்த விஷயத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக சமந்தாதான்! இத விட வேற என்ன வேணும்?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:28  )

தென்னிந்திய சினிமாவிலேயே முன்னனி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நடிகைகளில் அதிக ரசிகர் பட்டாளம் வைத்துள்ள நடிகையாகவும் இருந்து வருகிறார். பெரும்பாலான இளைஞர்களுக்கு இவர்தான் கனவுக்கன்னி. திருமணத்திற்கு முன்புவரை அனைத்து நடிகைகளை எப்படி கொண்டாடி வருகிறோமோ அதை போல் தான் சமந்தாவையும் கொண்டாடி வந்தார்கள்.

ஆனால் திருமண பிரச்சினை, விவாகரத்து, ஊ சொல்றீயா பாடல், கதீஜா கேரக்டர் என அதிலிருந்துதான் சமந்தாவின் மார்கெட்டே உயர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். கதீஜாவாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார் சமந்தா. அதிலும் அம்சமா அழகா ஒரு பொண்ண பார்த்தேன் பாடல் அவருக்காகவே எழுதப் பட்ட பாடலாகத்தான் இருந்தது.

என்னதான் இந்தியாவே கொண்டாடக் கூடிய பெண்ணாக இருந்தாலும் நம்ம பல்லாவரப் பொண்ணு என்று சொல்லும் போது அதிலும் ஒரு பெருமை. பக்கா சென்னை பெண் தான் சமந்தா. இதுவும் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவருடைய செகண்ட் இன்னிங்ஸிற்கு பிறகு மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று பாலிவுட் நடிகை ஆல்யா பட் பட புரோமோஷனில் கலந்து கொண்டார் சமந்தா. சொந்த படத்தின் புரோமோஷனுக்கு வராத நடிகைகள் மத்தியில் வேறொரு நடிகையின் பட புரோமோஷனுக்கு சமந்தா வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது.

அப்போது மேடையில் ஒரு தெலுங்கு இயக்குனர் ஒருவர் சமந்தாவை பற்றி பெரிய அளவில் பேசியிருந்தார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது சினிமாவில் ரஜினி ஒருத்தருக்குத்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம். அவருக்கு அடுத்தப்படியாக சமந்தாவுக்குத்தான் அந்த மாதிரி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதை கேட்டதும் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரத்தில் கத்தி கூச்சலிட்டனர்.

Next Story