Cinema News
கடலில் மூழ்கியதா?.. கரை சேர்ந்ததா?!.. போட் திரைப்பட விமர்சனம் வாங்க பார்ப்போம்!…
போட் படத்தின் விமர்சனம்
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக இருப்பவர் சிம்பு தேவன். இவர் இயக்கத்தில் யோகிபாபு, சாம்ஸ், சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கவுரி கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் போட். இந்த படத்தின் விமர்சனம் பற்றி இங்கு பார்ப்போம்.
படத்தின் கதை: 1943ம் வருடம் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கும்போது மெட்ராஸ் மீது ஜப்பான் நாடு குண்டு போடப்போகிறது என்கிற செய்தி வெளியாகிறது. சில இடங்களில் குண்டும் விழுகிறது. அப்போது மக்கள் எல்லோரும் தப்பிக்க நினைக்கிறார்கள். அதில் சிலர் ஒரு படகில் ஏறி கடலுக்குள் செல்கிறார்கள். படகில் யாரெல்லாம் ஏறினார்கள். அவர்களின் பின்னணி என்ன?. படகில் என்ன நடந்தது?. சென்றவர்கள் பிழைத்தார்களா இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
இதுபோன்ற ஒரு கதையை யோசித்ததற்காகவே சிம்பு தேவனை நிச்சயம் பாராட்டலாம். மேலோட்டமாக பார்த்தால் ஒரு சர்வைவர் திரில்லர் படம் போல தோன்றும். அது இருந்தாலும் படத்தின் திரைக்கதை வேறு பாதையில் கொண்டு செல்கிறார் சிம்பு தேவன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு வித்தியாசமான பின்னணியை அமைத்து கவனம் ஈர்த்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், அவரின் பாட்டி, சாம்ஸ், சின்னி ஜெயந்த், கவுரி கிஷான் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்பரைஸும் உண்டு. அடுத்து நாம் பாராட்ட வேண்டியது ஜிப்ரானின் பின்னணி இசையை. பாடல்கள் இல்லை என்பதால் பின்னணி இசையின் முக்கியத்துவம் உணர்ந்து சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.
அடுத்து இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். படத்தின் பல காட்சிகளிலும் சிறப்பான ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் குறைகள் என்றால் டிரெய்லரை பார்த்துவிட்டு சர்வைவர் திரில்லர் என நினைத்து தியேட்டருக்கு போகும் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாந்து போவார்கள்.
ஏனெனில், பல காட்சிகளிலும் படகில் இருக்கும் கதாபாத்திரங்கள் அரசியலையும், இந்திய வரலாற்றையும் பேசுகிறார்கள். இது எல்லோருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. படத்தின் கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அமைத்திருக்கலாம். இன்னும் வேறு சில நடிகர்களை போட்டுருக்கலாம் என்கிற எண்ணமும் படம் பார்க்கும் நமக்கு வருவதே போட் படத்தின் பலவீனம்.