யார் பிள்ளை எக்கேடு கெட்டா எனக்கென்ன? தனுஷே தன் மகன்களோடு படத்தை பாக்க முடியுமா? கொதித்த பிரபலம்
தனுஷ் நடிப்பில் கடந்த 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ராயன். இந்தப் படத்தை தனுஷே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு காரணம் படமுழுக்க வன்முறை காட்சிகள் நிறைந்திருப்பதுதான். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரும் பட்டிமன்ற பேச்சாளருமான ஆலங்குடி வெள்ளச்சாமி இந்தப் படம் குறித்து அவருடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.
ஒரு நடிகராக தனுஷ் அவருடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குனராக படு தோல்வியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்வேன். ஏனெனில் நடிகருடைய வேலை என்னவெனில் நடிப்பது. அந்தப் படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதெல்லாம் கிடையாது. ஆனால் இயக்குனரின் வேலை சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும்.
அது எந்தளவு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் தனுஷ் இயக்குனராக இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார்? கதையும் இல்லை. கருமாந்திரமும் இல்லை. படமுழுக்க கொலை, கொள்ளை என வன்முறை காட்சிகளை எடுத்து வைத்து வளரும் இளந்தலைமுறையினரை கெடுக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார் தனுஷ்.
ஒரு குத்தூசியை வைத்துக் கொண்டு பார்க்கிறவர்களை எல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட குத்துவது. இது பார்ப்பவர்களை கொலை நடுங்க வைக்கிறது. முதலில் அவருடைய மகன்களோடு இந்தப் படத்தை தனுஷே பார்க்க முடியுமா? தைரியம் இருந்தால் பார்க்க சொல்லுங்கள். அப்போ எவன் பிள்ளை எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன என்ற மன நிலையில் தான் தனுஷ் இந்தப் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.
இப்போதுள்ள தலைமுறையினர் தான் பார்ப்பது, பேசுவதைத்தான் பின்பற்றுகிறார்கள். அப்படி ராயன் படத்தை பார்க்கும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கத்தியையோ குத்தூசியையோ தூக்கினால் என்னாகும்? இதை யோசிக்க வேண்டாமா? வசூலில் தனுஷ் வெற்றிப்பெற்றாலும் இயக்குனராக அவர் ஒரு படுதோல்விதான் அடைந்திருக்கிறார் என்று ஆலங்குடி வெள்ளச்சாமி கூறியிருக்கிறார்.
மேலும் காலவெள்ளத்தில் ஒரு படம் நின்று பேசவெண்டும். அதற்கு தரமான கதைகள் தான் அவசியம். இந்த மாதிரி படம் எல்லாம் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். ராயன் திரைப்படத்தை மட்டும் சொல்லவில்லை. இது போன்று எடுப்பதற்கு முன் கொஞ்சம் சமூக பொறுப்பும் இயக்குனர்களுக்கு அவசியம் என்றும் கூறியிருக்கிறார்.