தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு முக்கியத்துவம் வில்லன்களுக்கும் கொடுக்கப்படுகிறது. வில்லன்கள் என்றாலே முறுக்குமீசை, மரு, கணீர் குரல் என அனைவரையும் பயப்பட வைக்கும் அளவு தோற்றத்தில் இருக்க வேண்டும் என எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருக்கும் முறையாக இருந்தது. நம்பியார் அவர் கண்ணை உருட்டியே எல்லாரையும் பயப்பட வைத்தார்.
அதே போல வீரப்பன் அவருடைய கணீர் சிரிப்பால் கதிகலங்க வைத்தார். இந்த டிரெண்ட் அப்படியே 80கள் காலத்தில் மாறியது. கன்னத்தில் ஒரு மரு, முறுக்கு மீசை, நீளமான தாடி, மொட்டைத்தலை என வில்லன்களை வடிவமைத்தார்கள். சத்யராஜ் பெரும்பாலும் மரு மற்றும் மொட்டைத்தலையுடனேயே வில்லனாக நடித்திருப்பார். ராதாரவியும் அப்படித்தான் பெரும்பாலான படங்களில் தோன்றினார்.
90கள் காலத்தில் இது மேலும் மாறியது. பெண்களிடம் சில்மிஷம் பண்ணாலே அது வில்லன்தான் என நம்ப வைத்தார்கள். இதற்கு உதாரணமாக நடித்தவர் மன்சூர் அலிகான். ஆனால் சமீபகாலமாக வில்லன்களையும் பெண்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் ஹீரோக்களை விட வில்லன்களைத்தான் அழகாக காட்டுகிறார்கள். இல்லை இல்லை அழகாக இருக்கிறார்கள்.
கைதி படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்துதான் பிரபலமானார். ஆனால் இன்று அவர் ஹீரோவாக மாறிவிட்டார். அதற்கு காரணம் வில்லனாக ரசிகர்கள் அவரை ரசிக்க தொடங்கி பப்ளிசிட்டி அதிகமானதுதான் காரணம். இந்த நிலையில் தன் படங்களில் வில்லன்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற டிரெண்டை உருவாக்கியவரே விஜயகாந்த்தான் என முருகதாஸ் கூறியிருக்கிறார்.
arjuna
இன்று விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் முருகதாஸ் பேசும் போது ‘என்னுடைய படங்களில் மட்டும் வில்லன்கள் அழகாக இருக்கிறார்கள் என பல பேர் சொல்வதுண்டு. ஆனால் வில்லன்களை முதலில் அழகாக காட்டியதே விஜயகாந்த்தான். அவருக்கு வில்லனாக சத்யராஜ் , சரத்குமார் என அழகானவர்களை நடிக்க வைத்தார்’என முருகதாஸ் கூறினார்.
