மீண்டும் மீண்டுமா?.. மாரி செல்வராஜுடன் இணையும் தனுஷ்.. எப்படிப்பட்ட கதை தெரியுமா?..

Actor Dhanush: தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். 'ராயன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மிகவும் பரபரப்பாக அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார்.
இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருப்பதால் அதன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மற்ற இயக்குனர்களின் படங்கள்: நடிகர் தனுஷ் இயக்கத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு தொடர்ந்து படங்களை இயக்கி வந்தாலும் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இது இல்லாமல் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இது தொடர்பான பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.
மாரி செல்வராஜுடன் தனுஷ்: மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் ஏற்கனவே கர்ணன் என்கின்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. கிராமத்தில் ஒதுக்கப்பட்டவர்களை குறித்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் மாரி செல்வராஜுடன் நடிகர் தனுஷ் இணைய இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த திரைப்படமும் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது 1970களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகின்றது.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாரி செல்வராஜ் தற்போது பைசன் என்கின்ற திரைப்படத்தை எடுத்து வரும் நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு தனுசுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.