காலங்கள் மாற மாற பல பேரை நியாபகம் வைத்துக் கொள்வதிலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சினிமாத் துறையில் 90கள் காலகட்டத்தில் விஜய் அஜித்துக்கு தரமான படங்களை கொடுத்து இன்று வரை மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் இயக்குனர் எழில். விஜய் அஜித் மட்டுமில்லாமல் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் எழில்.
விஜய் சிம்ரன் நடிப்பில் வெளியான அந்தப் படம் பெரிய வெற்றிப்பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. விஜய் கெரியரில் இன்னும் அந்தப் படத்துக்கு மவுசு இருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு பிரபுதேவாவை வைத்து பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தை எடுத்தார் எழில். முக்கோண காதலை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் கார்த்திக் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார்.
படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அமைந்த பாடல்கள்தான். அடுத்ததாக அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தை கொடுத்தார். அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். கூடவே சிவக்குமார், நாகேஷ் என எண்ணற்ற பல நட்சத்திர பட்டாளங்களே இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படமும் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியடைந்ததோடு மட்டுமில்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது. தமிழ் நாட்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது.
மீண்டும் அஜித் ஜோதிகா காம்போவில் மற்றுமொரு படத்தை எடுத்தார் எழில். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில்தான் அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே பிரச்சினை ஆரம்பமானது .இந்தப் படத்திற்கு பிறகு லிங்குசாமி தயாரிப்பில் தீபாவளி படத்தை இயக்கினார். ஜெயம் ரவி நடிப்பில் உருவான இந்தப் படம் ரவுடியிசத்தையும் காதல் உணர்வையும் சேர்த்து சம நிலைப்படுத்திய விதம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
இந்தப் படத்திற்கு பிறகு தன்னுடைய டெம்ப்ளேட்டையே மாற்றினார் எழில். சிவகார்த்திகேயனை வைத்து காமெடியான படத்தை எடுத்தார். அதுதான் மனம் கொத்தி பறவை. இது வெற்றிப்பெற இதே டெம்ப்ளேட்டில் படம் எடுக்க ஆரம்பித்தார். அப்படி வந்ததுதான் தேசிங்கு ராஜா திரைப்படம். விமல் ,சூரி காம்பினேஷனில் உருவான இந்தப் படம் 100 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
poovellam un vasam
இதே பாணியில் அடுத்தடுத்து வெள்ளைக்கார துரை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது தேசிங்கு ராஜா 2 படத்தையும் எடுத்து அந்தப் படமும் ரசிகர்களை கவரவில்லை. இவர் கமலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
