Rajamouli: பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற திரைப்படங்கள் ராஜமவுலியை இந்திய சினிமாவில் பெரிய இயக்குனராக மாற்றியிருக்கிறது. துவக்கத்தில் சாதாரண கமர்ஷியல் மசாலா படங்களையே ராஜமவுலி இயக்கி வந்தார். நான் ஈ படம் அவர் மீதான பார்வையை மாற்றியது. ஏனெனில், வில்லனால் கொல்லப்பட்ட ஹீரோ ஒரு ஈயின் உடலுக்குள் போய் அவனை பழி வாங்குகிறான் என்பதுதான் கதை.
சொன்னால் சிரிப்பாக இருக்கும் இந்த கதைக்கு கச்சிதமாக திரைக்கதை அமைத்து சரியான இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து எமோஷனலாக ரசிகர்களை கதையோடு ஒன்ற வைத்து படத்தை சூப்பர் ஹிட் ஆக்கி காட்டினார் ராஜமவுலி. சிரஞ்சீவின் மகனை வைத்து இவர் இயக்கிய மஹதீரா படமும் பேசப்பட்டது.
பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம்தான் பேன் இண்டியா படமாக வெளியாகி எல்லா மொழிகளிலும் வெற்றி வாகை சூடியது. அதேபோல், இப்படத்தின் இரண்டாம் பாகமும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
அதேபோல், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து இவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படமும் சூப்பர் ஹிட் அடித்து பல நூறு கோடிகளை வசூல் செய்தது. இப்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் பிரித்திவிராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அதோடு, மாதவனும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக ஹைதராபாத் பிலிம் சிட்டியில் ரூ.50 கோடி செலவில் வாரணாசி நகர் போல தீவிரமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை பார்க்கும்போது வாரணாசி, காசி பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு செட்டுக்கே 50 கோடி பட்ஜெட் என்றால் அது எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் சூப்பர் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பட்ஜெட்டே 15 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
