எல்லாரும் செய்றதத்தான் நானும் செய்ய முடியும்!.. ஞானவேல் சொல்றத பாருங்க!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:06  )

ரஜினியின் நடிப்பில் உருவான வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா.ச.ஞானவேல் இயக்கியிருக்கிறார். எனவே, சமூக கருத்துக்களை கொண்ட படமாக வேட்டையன் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக என்கவுண்டர் என்றாலே அது சரிதான் என்கிற எண்ணத்தைத்தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் காவல் அதிகாரியாக நடிக்கும் எல்லாம் நடிகர்களுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருவார்கள். அதைத்தான் கெத்தாக நினைப்பார்கள். அப்படி நடிக்கும்போது ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும் என நம்புவார்கள்.

ஆனால், என்கவுண்ட்டருக்கு வேறு ஒரு பக்கம் இருக்கிறது. அதைத்தான் வேட்டையன் படம் பேசுகிறது. எனவே, இதுபோன்ற ஒரு கதையில் நடித்ததற்காக ரஜினியை கண்டிப்பாக பாராட்டலாம். இந்த படத்தில் ரஜினியின் நண்பரும், பாலிவுட் நடிகருமான அமிதாப்பச்சன் என்கவுண்ட்டரை எதிர்க்கும் மனித உரிமை ஆணைய அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்த படம் ஜெயிலர், கோட் அளவுக்கு வசூலை பெறவில்லை என்றாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது. அதற்கு காரணம் தொடர் விடுமுறை ஒரு முக்கிய காரணம். படம் வெளியாகி 2 நாட்களில் இந்தியா முழுவதும் சேர்த்து 50 கோடி வசூலானதாக சொல்லப்பட்டது.

ஒருபக்கம், வழக்கமாக தமிழ், தெலுங்கு படங்களில் வரும் கார்ப்பரேட் வில்லனை வேட்டையன் படத்திலும் ஞானவேல் காட்டியிருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதே கோட் சூட், அதே கண்ணாடி பில்டிங், அதே கார், அதே ஹெலிகாப்டர், அதே டெய்லர், அதே வாடகை என புளூசட்ட மாறனும் கிண்டலடித்தார்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள ஞானவேல் ‘கார்ப்பரேட் வில்லனை வேறு மாதிரி காட்ட முடியாது. அதனால்தான் மற்ற இயக்குனர்கள் எப்படி காட்டினார்களோ அப்படியே நானும் காட்டி இருக்கிறேன். ஆனால், கார்ப்பரேட் வில்லன் தொடர்பாக நான் காட்டிய காட்சிகள், நான் சொன்ன விஷயங்களை யாரும் சொல்லவில்லை’ என விளக்கமளித்திருக்கிறார்.

Next Story