SK.25: எனக்கு 100 அவருக்கு 25!... எல்லாமே சரியா சிங்க் ஆகுதே... ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:48  )

சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் இப்படம் முக்கிய படமாக அமைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து புதுப்புது சாதனைகளை செய்து வருகின்றது. மூன்று நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே வேகமாக அதுவும் மூன்று நாட்களில் 100 கோடியை வசூல் செய்த திரைப்படம் என்றால் அது அமரன் திரைப்படம் தான். இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். அடுத்தடுத்து இயக்குனர்களிடம் கதை கேட்டு படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறார்.

ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு பிறகு டான் திரைப்படத்தை இயக்கிய விபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சுதா கொங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே சுதா கொங்குரா சூர்யாவை வைத்து இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இது பலருக்கும் தெரிந்ததுதான். இதற்கு அடுத்ததாக அந்த கதாபாத்திரத்தில் யாரை வைத்து நடிக்க வைப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது.

நடிகர் தனுஷை வைத்து இயக்குவதா? அல்லது சிவகார்த்திகே இயக்குவதா? என்று படக்குழுவினர் பேசி வந்தார்கள். ஆனால் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து தான் இந்த திரைப்படம் உருவாகப்போகிறது என்பது உறுதியாக இருக்கின்றது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் புறநானூறு திரைப்படம் குறித்து அப்டேட்டை தெரிவித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் டிராப் ஆவதற்கு வாய்ப்பு இல்லை. இப்படம் தனது 100வது திரைப்படமாக இருக்கும். மேலும் வேறு ஒரு நடிகரின் 25 வது திரைப்படமாக கூட இது இருக்கலாம் என்று கூறி இருக்கின்றார். அதை வைத்துப் பார்த்தால் சிவகார்த்திகேயன் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story