Categories: Cinema News latest news

என்கிட்ட ஒரு கதை இருக்கு… ஆனா ஒருத்தனும் இல்ல!.. இப்படி சொல்லிட்டாரே இளையராஜா!…

இளையராஜா ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல. பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகள் இருக்கிறது. அவர் இசையமைத்த பல படங்களுக்கு அவரே பாடல்களை எழுதி இருக்கிறார். அது மட்டுமல்ல. அவருக்குள் ஒரு போட்டோகிராபர், ஒரு கதாசிரியர், ஒரு இயக்குனர் என பல திறமைகள் இருக்கிறது.

இது அவருடன் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கும் தெரியும். ஒரு படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது அந்த படத்தில் இயக்குனர் என்ன தவறு செய்திருக்கிறார் என கண்டுபிடித்துவிடுவார். சில காட்சிகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ சொல்வார். அப்படி வெற்றியடைந்த படங்கள் பல இருக்கிறது.

பின்னணி இசை மூலம் பல காட்சிகளுக்கு உயிர் ஊட்டியிருக்கிறார். பல மொக்கை படங்களையும் தனது இசையால் ஓட வைத்திருக்கிறார். அதனால்தான் அவரை இசைஞானி என அழைக்கிறார்கள். இளையராஜா இயக்குனர்களை வாழ வைத்த கடவுளாகவே பார்க்கப்பட்ட காலம் உண்டு.

80களில் ஒரு புதுமுக இயக்குனர் தனக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனில் இளையராஜாவை எப்படியாவது சந்தித்து கதை சொல்லி அவரின் சம்மதத்தை வாங்கிவிடுவார். இளையராஜா இசையமைக்கிறார் எனில் ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன் வருவார். இப்படி பல இயக்குனர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

இளையராஜா பாவலர் கிரியேசன்ஸ் என்கிற பெயரில் சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அதோடு, அவரிடம் சில கதைகளும் இருக்கிறது. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘பாரதிராஜா இயக்கிய நாடோடித் தென்றல் படத்தின் டைட்டில் கார்டில் கதாசிரியர் என என் பெயரை போட்டார்கள். ஆனால், உண்மையில் அது என்னுடைய கதை இல்லை.

நான் பாரதிராஜாவிடம் சொன்ன அதை அவர் எடுக்கவே இல்லை. அந்த கதை இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது. யாரேனும் அதை எடுக்க விரும்பினால் என்னிடம் கதை கேட்க வரலாம். கிளாசிக்கான கதை அது. ஆனால், அதுபோன்ற கதையை எடுக்க இப்போது யாரும் முன்வரமாட்டார்கள்’ என கூறியிருக்கிறார்.

Published by
சிவா