இந்தியன் 2 படம் லைக்காவுக்கு நஷ்டமா?.. லாபமா?!.. இது தெரியாம எல்லாரும் பேசுறாங்கப்பா!..
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கி உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்தியன் 2. கடந்த 12ம் தேதி வெளியான இப்படத்தில் கமலுடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஜகன், சமுத்திரக்கனி என பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஷங்கர் படம் என்பதால் வழக்கம்போல மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவானது. கடந்த 4 வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பல தடைகள் மற்றும் பஞ்சாயத்துக்களால் இப்படத்தின் படப்பிடிப்புகள் பல மாதங்கள் நிறுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் நிதிநெருக்கடி காரணமாக படப்பிடிப்பு நின்று போனது.
அப்போதுதான் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை லைக்காவுடன் இணைந்து தயாரிக்க முன்வந்தது. அதன் காரணமாகவே இப்படம் மீண்டும் டேக் ஆப் ஆனது. 1996ம் வருடம் வெளியான இந்தியன் படம் சூப்பர் ஹிட் என்பதாலும், இந்தியன் தாத்தா என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் அதிக வரவேறபை பெற்றதாலும் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இப்படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இல்லை. லாஜிக்கே இல்லை.. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை வைத்தார்கள். இதனால் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்து போனது. கடந்த 14ம் தேதி முதலே தியேட்டர்கள் காத்து வாங்க துவங்கியது. எனவே, இந்தியன் 2 படம் லைக்காவுக்கு நஷ்டம்தான் என பலரும் சொன்னார்கள்.
ஆனால், அதில் உண்மையில்லை என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு படங்களும் 500 கோடியில் உருவாகி இருக்கிறது. அதை இரண்டாக பிரித்தால் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் 250 கோடி. இதில் ஓடிடி உரிமையை 125 கோடிக்கு நெட்பிளிக்ஸுக்கு விற்றுவிட்டார்கள். தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி 65 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இதிலேயே 190 கோடி வந்துவிட்டது.
தியேட்டர் மூலம் வரவேண்டிய தொகை 60 கோடி மட்டுமே. இதில் கர்நாடக உரிமை 15 கோடிக்கு விற்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகை 45 கோடி மட்டுமே. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை போன்ற மாநிலங்களில் தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வசூல் இருக்கிறது. இதுபோக ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளில் தியேட்டர்களில் வரும் வருமானம் இருக்கிறது. மேலும், ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை போன்றவை இருக்கிறது. எனவே, இதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் இந்தியன் 2 படம் லைக்காவுக்கு நஷ்டமில்லை. அதோடு, பல கோடிகள் லாபம்தான் என்பதை புரிந்துகொள்ளலாம் என்கிறது டிரேடிங் வட்டாரம்.