அரசியலுக்கு வருவது பற்றி கீர்த்தி சுரேஷ் கேட்ட அந்த கேள்வி!.. நச் பதிலை சொன்ன தளபதி..
டீன் ஏஜில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அப்பாவை வற்புறுத்தி அடம்பிடித்து சினிமாவுக்கு வந்தவர் விஜய். நடனத்தில் அதிக ஆர்வம் இருந்ததால் அதற்காக பல மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார். அது சினிமாவில் நடிக்கும்போது அவருக்கு கை கொடுத்தது. துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் மட்டும் நடித்தார்.
அதன்பின் அவரின் அப்பாவின் முயற்சியால் விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். இந்த படம் விஜயை ரசிகர்களிடம் கொண்டு சென்றது. அதன்பின் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் அவருக்கு பெண் ரசிகைகளை கொண்டு வந்தது. மேலும் துள்ளாத மனமும் துள்ளும், கில்லி போன்ற படங்களில் வசூல் விஜயை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாற்றியது.
அதன்பின் கடந்த 20 வருடங்களில் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் படம் என்றாலே வெற்றி என்கிற நிலையை விஜய் தனது கடின உழைப்பால் உருவாக்கி இருக்கிறார். அதோடு 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராகவும் உயர்ந்திருக்கிறார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் முடிந்த பின் ஒரே ஒரு படத்தில் நடிக்கப்போவதாகவும், அதன்பின் அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் அறிவித்திருக்கிறார். இது சினிமா உலகினருக்கும், அவரின் தீவிர ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சியின் பெயரையும் விஜய் அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடவிருக்கிறது. எனவே, அடுத்த ஒரு படத்தில் நடித்துவிட்டு விஜய் அரசியல் கட்சி தொடர்பான பணிகளில் ஈடுபடவிருக்கிறார்.
இந்நிலையில், விஜயுடன் சில படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘விஜய் சார் தனது அரசியல் எண்ட்ரியை அறிவித்தபோது நான் அருகில் ஷூட்டிங்கில் இருந்தேன். உடனே, படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவருக்கு வாழ்த்து சொன்னேன்.
அப்போது ‘இந்த அறிக்கையை எழுதும் போது எப்படி ஃபீல் பண்ணீங்க?’ எனக்கேட்டேன். அதற்கு அவர் ‘இதுதான் கடைசிப்படம் என சொல்லும்போது கஷ்டமாக இருந்தது. ஆனால், அரசியலுக்கு வருவது எனக்கு சந்தோஷம்தான்’ என சொன்னார். கட்சி பெயர் நல்லா இருக்கு. எனக்கும் ஒரு சீட் கொடுங்க’ என விளையாட்டாக சொல்லிவிட்டு வந்தேன்’ என கீர்த்தி சுரேஷ் சொல்லி இருக்கிறார்.