எம்.எஸ்.வியை அசர வைத்த இமான் பாட்டு!... நேரில் கூப்பிட்டு இப்படி பாராட்டினாராம்!..
கடந்த 20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் டி.இமான். பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். இவரின் பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் இவர்தான்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் இமான்தான். ரஜினி நடித்து வெளியான அண்ணாத்த படத்திற்கும் இசையமைத்தார். இந்த படம் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை என்றாலும் பாடல்கள் பிடித்திருந்தது.
தமிழ் சினிமாவில் பல அற்புதமான மனதை மயக்கும் மெலடி பாடல்களை கொடுத்திருக்கிறார் இமான். குறிப்பாக இமானின் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய அனைத்து பாடல்களுமே தேன் சொட்டும் சூப்பர் மெலடிகள்தான். கயல், உடன் பிறப்பே, டெடி, மருது, தொடரி, கும்கி, ரெக்க, ரோமியோ ஜூலியட், ரம்மி, பாண்டிய நாடு உள்ளிட படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
குறிப்பாக அஜித் - நயன்தாரா நடித்து வெளியான விஸ்வாசம் படத்தில் இவரின் பாடல்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக மகளுக்காக தந்தை பாடும் ‘கண்ணான கண்ணே’ பாடல் மனதை வருடியது. இந்த பாடலுக்காக தேசிய விருதையும் வாங்கினார் டி. இமான்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இமான் ‘சினிமாவுக்கு வருவதற்கு முன் சீரியல்களுக்கு பாடல்களை இசையமைத்து கொண்டிருந்தேன். அப்படி நான் இசையமைத்ததில் கோலங்கள் சீரியலும் ஒன்று. அந்த சீரியலின் டைட்டில் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா கேட்டு ரசித்திருக்கிறார்.
அதோடு, யார் இசையமைத்தது? யார் பாடியது? என்கிற விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். ஒரு மியூசிக் யூனியன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது என்னை அழைத்து ’நீதான கோலங்கள் சீரியலுக்கு மியூசிக் பண்ண.. தினமும் அதை கேட்பேன்டா’ என சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது’ என சொல்லி இருக்கிறார்.