Amaran: அமரன் ஒரு பெஸ்ட் சினிமா!... ரொம்ப பெருமையா இருக்கு சிவா... வாழ்த்து மழை பொழிந்த அனிருத்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:11  )

தமிழ் சினிமாவில் தீபாவளியை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் வெளியானது. அதில் அமரன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த எதிர்பார்ப்பை அமரன் திரைப்படம் சரியாக பூர்த்தி செய்திருந்தது என்று தான் கூற வேண்டும். தீபாவளி அன்று வெளியானது தொடங்கி தற்போது வரை திரையரங்குகளில் சக்க போடப்பட்டு வருகின்றது. தமிழகம் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். உலக அளவில் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை நெருங்கி இருக்கின்றது.

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் தான் அதிக வசூலை கொடுத்த படமாக இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து பலரையும் கவர்ந்திருக்கின்றார் சாய் பல்லவி. அமரன் திரைப்படம் பலரிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த பெரிய பெரிய ஜாம்பவான்கள் படக்குழுவினரை வாழ்த்தி வருகிறார்கள். ரஜினிகாந்த் படக்குழுவினரை வீட்டிற்கு அழைத்து பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் அரசியல் பிரபலங்களான முதல்வர் மு க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தார்கள். நேற்று கூட பழம்பெரும் நடிகரான சிவகுமார் தனது மகன் சூர்யா மற்றும் மருமகள் ஜோதிகாவுடன் இணைந்து படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

தொடர்ந்து வாழ்த்து மழையில் அமரன் திரைப்படம் நனைந்து வரும் நிலையில் மற்றொரு முக்கிய பிரபலமும் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் அனிருத் அமரன் திரைப்படத்தை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.

அதில் அமரன் சினிமா இஸ் தி பெஸ்ட். முன்பை விட தற்போது சிவகார்த்திகேயனை பார்க்கையில் பெருமையாக இருக்கின்றது. மேலும் என் அன்பு சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கும், பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த படத்தை தயாரித்த கமலஹாசன், மகேந்திரன் சார் மற்றும் டிஸ்னி சகோதரர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் என்று பதிவிட்டிருக்கின்றார்.

Next Story