தெரியாது... எந்த ஏழு பேர்?.. ஓ சாரி!.. மீண்டும் மீண்டும் ரசிகர்களிடம் சிக்கும் ரஜினி!...

Rajinikanth: பொதுவாக நடிகர்கள் வேறொரு உலகத்தில் வாழ்வார்கள். காலை எழுந்தவுடன் படப்பிடிப்புக்கு கிளம்பி மாலை வருவார்கள். அதன்பின் சினிமா தொடர்பான விஷயங்களை விவாதிப்பார்கள். அல்லது, புதிய இயக்குனர்களிடம் கதை கேட்பார்கள். நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளை கவனிக்க அவர்களுக்கு நேரமே இருக்காது.
பல நடிகர்களுக்கு நேரம் இருந்தாலும் தெரிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். முன்பெல்லாம் அது வெளியே தெரியாது. இப்போது செய்தியாளரக்ள் கேள்வி கேட்கும் போது அது தெரிந்துவிடுகிறது. இதில், அதிகம் சிக்கியது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துதான். ஒரு விஷயத்தை பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது அவர் யாரை மதிக்கிறாரோ அவர்கள் சொல்வதை நம்புவார். அதையே செய்தியாளர்களிடமும் சொல்லுவார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த ஊர் மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இதுபற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன ரஜினி ‘கூட்டத்தில் ஷமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள். அவர்கள்தான் முதலில் போலீசாரை தாக்கினார்கள்’ என சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.
‘மக்கள் பக்கம் நிற்காமல் இவர் ஏன் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறார்?’ என பலரும் இவரை விமர்சனம் செய்தார்கள். ஒருமுறை, ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் 7 பேர் தொடர்பான கேள்விக்கு ‘எந்த ஏழு பேர்?’ என அப்பாவியாக கேட்டு ட்ரோலில் சிக்கினார் ரஜினி.
அரசியல் கட்சி துவங்கிய போது ‘என்னிடம் ‘உங்கள் கொள்கை என்ன?’ என நிருபர் கேட்டார். தலை சுத்திடிச்சி’ என அவர் சொல்ல பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள். இந்நிலையில், தற்போது மீண்டும் ட்ரோலில் சிக்கியிருக்கிறார் ரஜினி. நேற்று சென்னை விமான நிலையத்தில் ‘திருவண்ணாமலையில் 7 பேர் இறந்து போயிருக்காங்க.. அது பற்றி உங்கள் கருத்து?’ எனக்கேட்க ரஜினியோ ‘எப்போது?’ எனக்கேட்டார்.
நிருபர் ‘நிலச்சரிவில் சிக்கி இறந்துட்டாங்களே’ என சொல்ல ‘ஓ மை காடி. ஐ யம் சாரி’ என சொல்லிவிட்டு போய்விட்டார். இதையடுத்து.. தெரியாது.. சாரி.. எப்போது?... எந்த ஏழு பேர்?.. இதெல்லாம் தலைவரின் பன்ச் வசனங்கள் என நெட்டிசன்கள் ரஜினியை கலாய்த்து வருகின்றனர்.