என்கவுண்ட்டர் மட்டுமில்லை!.. வேட்டையனில் வேற ஒரு மேட்டரும் இருக்காம்!...
Vettaiyan: ஜெயிலர் ஹிட்டுக்கு பின் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம்தான் வேட்டையன். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய த.ச.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜெய்பீம் படத்திற்கு முன்பே ஞானவேல் ஒரு படத்தை இயக்கியிருந்தாலும் அவரின் அடையாளம் ஜெய்பீம்தான்.
ஏனெனில் அவர் எடுத்துக்கொண்ட கதையும், அப்படத்திற்கு அவர் அமைத்த திரைக்கதையும்தான். போலீசாரின் பொய் வழக்கில் சிக்கிய ஒரு இருளர் குடும்பம் என்ன ஆகிறது என்பதை உணர்வுப்பூர்வோடு, அழுத்தமாக சொல்லி இருந்தார். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் வழக்கறிஞராக சூர்யா இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த படம் அதிர்வலைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. ஞானவேலுடன் ரஜினி இணைகிறார் என்றதும் எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். ஏனெனில், ரஜினி கமர்ஷியல் மசாலா மற்றும் மாஸ் படங்களில் நடிப்பவர். அதைத்தான் அவரின் ரசிகர்களும் விரும்புவார்கள். ஞானவேலோ சமூகப்பிரச்சனைகளை பேசுபவர்.
இருவரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால், சமீபத்தில் இதற்கு பதில் சொல்லிவிட்டார் ஞானவேல். இது என்னுடைய படம் என்றாலும் ரஜினி ரசிகரக்ளுக்கு தேவையான விஷயங்களும் இருக்கும் என சொல்லி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது.
முழுக்க முழுக்க என்கவுண்ட்டர் பற்றிய கதைதான் வேட்டையன் என சொல்லப்பட்டது. டிரெய்லரில் அது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது. ஆனால், என்கவுண்ட்டர் மட்டுமில்லாமல் படத்தில் வேறு ஒரு விஷயமும் இருக்கிறதாம். அதுதான் கல்வியை வைத்து தொழிலதிபர்கள் செய்யும் கொள்ளைகள்.
அப்படிப்பட்ட வில்லனாகத்தான் தெலுங்கு நடிகர் ராணா நடித்திருக்கிறார். கல்வியை வைத்து எப்படி மாஃபியா கும்பல் செயல்படுகிறது. அதை தடுக்க ரஜினி என்ன செய்கிறார் என்பது படத்தில் பேசப்பட்டிருக்கிறதாம். இந்த படத்தில் துஷரா விஜயன் ஒரு ஆசிரியராக நடித்திருக்கிறார். அவருக்கு கதாபாத்திரம் பேசப்படும் எனவும் சொல்லப்படுகிறது. வருகிற 10ம் தேதி வேட்டையன் வெளியாகிறது.