Categories: Cinema News latest news

2024-ல் தமிழில் வெளியாகி ஹிட் அடித்த மற்ற மொழி படங்கள்!.. வசூலை குவித்த புஷ்பா 2…

2024 Tamil dupped movies: சினிமா துவங்கியதிலிருந்து 1980கள் வரை தமிழ்நாட்டில் நேரடி தமிழ் படங்கள் மட்டுமே ரிலீஸாகி வந்தது. ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுங்கு போன்ற மற்ற மொழி திரைப்படங்கள் அந்த மொழிகளில் அப்படியே வெளியாகும். கோவை, சென்னை போன்ற ஊர்களில் அப்படிப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் தியேட்டர்களும் இருந்தது.

மற்ற ஊர்களில் நேரடி தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகும். ஆனால், 90களில் தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாக துவங்கியது. விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐபிஎஸ், ராஜசேகரின் இதுதான்டா போலீஸ் என தெலுங்கு படங்கள் தமிழில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. தொடர்ந்து பல தெலுங்கு படங்களும் வெளியானது.

அதன்பின் மம்முட்டி, சுரேஷ்கோபி போன்ற நடிகர்களின் மலையாள திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதன்பின் மற்ற மொழி படங்கள் தமிழில் வெளியாவது அதிகரித்துவிட்டது. ஹாலிவுட் நடிகர்களும், ஜாக்கிசானும் கூட தமிழ் பேச துவங்கிவிட்டனர். ஷாருக்கானும் தமிழ் பேச துவங்கி விட்டார். பாகுபலி படம் சூப்பர் ஹிட் அடிக்கவே பாகுபலி 2, கேஜிஎப், காந்தாரா, கேஜிஎப் 2, சலார், புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்களும் தமிழில் நல்ல வசூலை பெற்றது.

எனவே, இப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களுமே பேன் இண்டியா படமாக மாறிவிட்டது. அந்தவகையில் 2024ம் வருடம் தமிழகத்தில் வெளியாகி ஹிட் அடித்த மற்ற மொழி படங்கள் பற்றி பார்ப்போம்.

aavesham

மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் 2024 பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட் அடித்தது. இத்தனைக்கும் இந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படவில்லை. குணா குகை, கண்மணி அன்போடு காதலன் பாடல் ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 54 கோடியை அள்ளியது.

அடுத்து பஹத் பாசிலின் ஆவேசம் படமும், மமிதா பைஜூ நடித்த பிரேமலு படமும் தமிழ்நாட்டில் நல்ல வசூலை பெற்றது. பிரித்திவிராஜின் ஆடுஜீவிதம் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை பெற்றது. துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடித்து தமிழ்நாட்டில் 15 கோடி வசூலை பெற்றது. அதேபோல், பிரபாஸ், அமிதாப்பச்சன் மற்றும் கமல் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாக கல்கி திரைப்படம் தமிழில் 35.30 கோடியை வசூல் செய்தது.

இறுதியாக டிசம்பர் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 இந்த வருடம் தமிழில் வெளியான மற்ற மொழி படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 55.6 கோடி வசூலை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 2025ம் வருடமும் தொடர்ந்து பேன் இண்டியா படங்கள் வெளியாகவுள்ளதால் பல படங்கள் ஹிட் அடிக்கும் என கணிக்கப்படுகிறது.

Published by
சிவா