உண்மைய சொன்னா அசிங்கமாவும் அறுவறுப்பாவும் இருக்கு!.. ஃபீல் பண்ணி பேசும் பார்த்திபன்!..

by ராம் சுதன் |

பாக்கியராஜிடம் உதவியாளராக வேலை செய்து சினிமாவை கற்றுக்கொண்டவர் பார்த்திபன். புதிய பாதை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த கதையில் நடிக்க வேறு நடிகர்கள் யாரும் முன்வராததால் அவரே அப்படத்தில் நடித்து இயக்கினார். முதல் படமே அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

கமல்ஹாசன் போல புதுமையான முயற்சிகளை விரும்புகிறவர்தான் பார்த்திபன். பார்த்திபனுக்கு பக்கா கமர்ஷியல் படங்களை எடுக்க நன்றாகவே தெரியும். அது அவருக்கு நன்றாகவே வரும். அப்படிப்பட்ட படங்களை இயக்கிய கல்லா கட்டி கோடிக்கு மேல் கோடிகளை அவரால் சேர்த்து சொகுசாக வாழமுடியும். கடனில்லாமல் வாழ முடியும்.

ஆனால், பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதனால் நஷ்டங்களை சந்தித்திருக்கிறார். சுகமான சுமைகள், ஹவுஸ்புல், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, இரவின் நிழல் என அவரின் புதிய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த படங்கள் எல்லாமே அவருக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை.

ஆனாலும் பார்த்திபன் முயற்சியை விடவில்லை. ஒருபக்கம் கமர்ஷியல் படங்களில் நடிகராக வலம் வரும் பார்த்திபன் மறுபக்கம் தனக்கு பிடிக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அப்படி சமீபத்தில் வெளியான படம்தான் டீன்ஸ். இந்தியன் 2 படத்தோடு டீன்ஸ் படம் வெளியானது.

பொதுவாக பெரிய படங்கள் வரும்போது சின்ன படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், இந்தியன் 2 படத்திற்கு 800 தியேட்டர்கள் என்றால் என் படத்திற்கு 200 தியேட்டர்கள் கிடைக்கட்டும். இந்தியன் 2 படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் டீன்ஸ் படம் பாருங்கள் என சொன்னார். இப்படி பார்த்திபன் சொல்வது முதன் முறையில்லை.

இந்நிலையில், ‘இப்படி சொல்வதை எப்படி உணர்கிறீர்கள்?’ என ஊடகம் ஒன்றில் கேட்ட கேள்வி ‘உண்மையிலே அசிங்கமாகவும் அறுவெறுப்பாகவும் இருக்கிறது. இத்தனை வருடம் சினிமாவில் இருப்பது. ரசிகர்களின் கையை பிடித்து இழுப்பது போல இருக்கிறது. நல்ல படைப்புகளுக்காகவும் இப்படி போராட வேண்டி இருக்கிறது. இத்தனை வருடங்களாக சினிமாவில் இருப்பது சந்தோஷம். ஆனால், இப்படியேதான் இருக்கிறோம் என்பது உறுத்துகிறது. எனக்கும் வேறு வழியில்லை’ என் மிகவும் ஃபீல் செய்து பேசியிருக்கிறார்.

Next Story