Categories: Cinema News

புரமோஷனுக்கு மட்டும் இவ்வளவு கோடியா?!.. பீதி கிளப்பும் கங்குவா பட தயாரிப்பாளர்!…

Ganguva: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்தவர் ஞனவேல் ராஜா. இவர் நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர். சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம்தான் இவரின் முதல் திரைப்படம். அதன்பின் பல ஹீரோக்களையும் வைத்து படங்களை தயாரித்திருக்கிறார்.

ஆனாலும், பெரும்பாலும் சூர்யா, கார்த்தியை வைத்து அதிக படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம்தான் கங்குவா. கடந்த 2 வருடங்களுக்கும் மேல் இந்த படத்திற்காக கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறார் சூர்யா. கங்குவா படம் 2 பாகங்களாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தை வீரம், வேதாளம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் 20 நிமிடம் மட்டுமே நிகழ்காலத்தில் நடக்கும். மீதமுள்ள 2 மணி நேரம் பிளாஷ்பேக்கில் சரித்திர கதை வரும் என சொல்லி இருக்கிறார் சிவா. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்திற்காக சூர்யா கொடுத்த உழைப்பை இப்படத்தில் பணிபுரிந்த சக கலைஞர்கள் ஊடகங்களில் சொல்லி ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள். இந்த படத்தின் வெற்றியை பெரிதாக நம்பியிருக்கிறார் சூர்யா.

ஏற்கனவே, அக்டோபர் 10ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால், ரஜினியின் வேட்டையன் படம் அதே தேதியில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தேதியை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இப்போது படத்தின் புரமோஷன் வேலைகளை படக்குழு துவங்கியிருக்கிறது.

இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ‘கங்குவா திரைப்படம் இந்தியில் மட்டும் 3500 தியேட்டர்களில் வெளியாகிறது. தியேட்டரில் வெளியிட 7 கோடி, புரமோஷன் செலவு 15 கோடி என ஹிந்திக்கு மட்டுமே 22 கோடி செலவு செய்திருக்கிறோம்’ என சொல்லி இருக்கிறார். சமீபத்தில் கங்குவா படம் 2 ஆயிரம் கோடி வசூலை பெறும் என அவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Published by
ராம் சுதன்