6 நாட்களில் ராயன் செய்த மெகா வசூல்!... 50வது படத்தில் அடிச்சி தூக்கிய தனுஷ்!...
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் நடிக்க துவங்கியவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனிடம் நடிப்பு பயிற்சி எடுத்தவர். செல்வராகவன் டெரர் இயக்குனர் என்பதால் நடிப்பின் பல கலைகளையும் கற்றுக்கொண்டார் தனுஷ். ஒருபக்கம் மசாலா படங்களிலும், ஒரு பக்கம் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதைகளிலும் நடிக்க துவங்கினார்.
தனுஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்கள்தான் அவரின் நடிப்பு திறமையை காட்டியது. இதில் கர்ணனை தவிர மற்ற படங்கள் எல்லாம் வெற்றிமாறன் இயக்கியது. செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கங்களில் நடித்தது தனுஷை செழுமைப்படுத்தியது.
அவருக்குள் ஒரு இயக்குனரும் உருவானார். அப்படி அவர் இயக்கிய முதல் படம்தான் பவர் பாண்டி. அதன்பின் பல வருடங்கள் கழித்து இப்போது தனுஷ் மீண்டும் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பாட்ஷா படம் போல பில்டப்புடன் தனுஷின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டு கேங்ஸ்டர் கும்பலில் தனது தம்பி, தங்கை சிக்கி கொள்ள தனுஷ் அசுரனாக மாறும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
விமர்சகர்களிடம் இப்படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருந்தது. இந்த படம் கடந்த 26ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு நல்ல ப்ரீபுக்கிங் இருந்தது. மேலும், நாளுக்கு நாள் இப்படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. 2 நாட்களுக்கு முன்பே இப்படத்தின் வெற்றிக்கு தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இருந்தார்.
படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ராயன் 100 கோடி வசூலை தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டுமெனில் இப்படம் இதுவரை 105 கோடியே 35 லட்சத்தை வசூல் செய்திருக்கிறது. ஏற்கனவே தனுஷ் நடித்து 100 கோடி வசூலை தொட்ட திருச்சிற்றம்பலம் வசூலை ராயன் படம் தாண்டும் எனவும் கூறப்படுகிறது. ராயன் பட வசூல் தனுஷையும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறது.