TR-ஆல தான் கெட்டுப் போயிட்டேன்... அவர் மட்டும் இல்லனா இப்போ...? ராதாரவி ஃப்ளாஷ்பேக்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:43:46  )
radharavi
X

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் ராதாரவி. இவர் பிரபல நடிகரான எம் ஆர் ராதாவின் மகன் ஆவார். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் காலங்களில் மிகச்சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் அசத்தி வந்தவர் எம் ஆர் ராதா. இவரின் முதல் மனைவியின் மகன்தான் ராதாரவி. சினிமாவில் அந்த அடையாளத்துடன் அறிமுகமான இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கின்றார்.

வில்லன் நடிகர் என்று கூறினாலே 90'ஸ் கிட்ஸ்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது இவரைத்தான். அப்படி கொடூர வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் பல மேடைகளில் பல சர்ச்சையான விஷயங்களை பேசி அடிக்கடி சிக்கலில் சிக்கிக் கொள்வார்.

இவர் பேச போகிறார் என்றாலே அது சர்ச்சையான விஷயமாக தான் இருக்கும் என்று பலரும் எண்ணுவார்கள். 71 வயதான நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். ஆனால் சமீபகாலமாக அவருக்கு காலில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.

டப்பிங் யூனியன் சங்கத் தலைவராக இருந்து வரும் ராதாரவி சமீபத்தில் அந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்திருந்தார். அவர் கையில் கைத்தடியுடன் வந்திருப்பதை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி விட்டனர். அதையடுத்து அங்கிருந்த சிலர் அவரை கை தாங்கலாக அழைத்துச் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "தனக்கு காலில் சிறிது அடிபட்டுள்ளது. அதனால் தான் தன்னால் நடக்க முடியாமல் போனது. ஆனால் இப்போது நான் நலமாக இருக்கிறேன். உடனே பல youtube சேனல்கள் நடக்க முடியாத நிலைக்குச் சென்று விட்டேன் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

மேலும் சினிமா என்பது என் ரத்தத்தில் ஊறிப்போன ஒரு விஷயம். சென்னையில் சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது தான் எனக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி முதலில் நடித்த திரைப்படம் தான் 'உயிருள்ளவரை உஷா'. இதில் நான் தான் நடிக்க வேண்டும் என்று டி ராஜேந்திரன் தன்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார். அந்த சமயத்தில் எனது அக்கா நான் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் .

அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அதற்குள் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததால் என்னால் அங்கு செல்ல முடியாமல் போனது. அதையடுத்து சினிமாவே வாழ்க்கை என்று மாறிவிட்டது. அப்போது மட்டும் நான் வெளிநாட்டிற்கு சென்றிருந்தால் தற்போது சினிமாவில் இருந்திருக்க மாட்டேன். வழக்கறிஞர் துறையில் மிகப்பெரிய ஆளாக மாறி இருப்பேன். நான் கெட்டுப் போனதே டி ராஜேந்தரனால தான்." என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Next Story