டிரெய்லரை காட்டி ஏமாத்திட்டியேப்பா!.. வேட்டையன் பார்த்துட்டு பொங்கும் ரசிகர்கள்...
Vettaiyan: லைக்கா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், பஹத் பாசில், துஷரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் வேட்டையன். ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட்டுக்கு பின் ரஜினி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் இது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜெய்பீம் மாதிரி ஒரு படத்தை எடுத்த ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில், அடிப்படையில் பத்திரிக்கையாளரான ஞானவேல் ஜெய்பீம் படம் மூலம் தான் சமூக அக்கறை கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனர் என காட்டிவிட்டார்.
ரஜினியோ மாஸ் கதைகளில் நடிப்பவர். அவரின் படங்களில் ஹீரோயிசம் இருக்க வேண்டும். அனல் பறக்கும் சண்டை காட்சிகளும், பன்ச் வசனங்களும் இருக்க வேண்டும். அதைத்தான் அவரின் ரசிகர்களுக்கும் விரும்புவார்கள். அவர் எப்படி ஞானவேல் இயக்கத்தில் நடிப்பார் என எல்லோரும் நினைத்தனர்.
ஆனால், என் கதையில் ரஜினி சாரை எப்படி காட்ட வேண்டுமோ அப்படி காட்டியிருக்கிறேன். ரஜினி சாருக்காக நான் எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. இது என்னுடைய படமாகவும் இருக்கும். ரஜினி சாரின் படமாகவும் இருக்கும் என சொன்னார் ஞானவேல். இன்று இப்படம் வெளியாகிவிட்டது.
இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. படத்தை பார்த்த பலரும் படம் சிறப்பாக இருப்பதாக சொல்லி வருகிறார்கள். வேட்டையன் பட டிரெய்லரில் என்கவுண்டர் தொடர்பான காட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. எனவே, படம் முழுக்க என்கவுண்ட்டர் பற்றி மட்டுமே காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால், படத்தில் என்கவுண்டருக்கு பின்னால் மற்றொரு முக்கிய விஷயத்தையும் ஞானவேல் பேசியிருக்கிறார். அதுதான் படத்தின் மையக்கருவாக இருக்கிறது. எனவே, படம் பார்த்த ரசிகர்கள் டிரெய்லரில் என்கவுண்டட்டர் மட்டுமே காட்டப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் கல்வி மாஃபியா, நீட் தொடர்பான விஷயங்களும் இருக்கிறது. படத்தின் 2ம் பாதியில் வரும் ஒரு காட்சி கூட டிரெய்லரில் இல்லை. படம் சிறப்பாக இருந்தது’ என சொல்லி வருகிறார்கள்.