கங்குவா வரட்டும் வச்சிக்கிறோம்!.. மரண வெயிட்டிங்கில் ரஜினி ரசிகர்கள்!.. இதெல்லாம் தேவையா?!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:40  )

Kanguva: ரசிகர்களின் கோபம் இப்போதெல்லாம் ஒரு படத்தின் வெற்றியையே பாதிக்கும் அளவுக்கு மாறிவிட்டது. ஒரு நடிகரின் ரசிகர்கள் அவரின் போட்டி நடிகரை சமூகவலைத்தளங்களில் அநாகரீகமாக திட்டுவது, அசிங்கமான ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து என ரசிகர்களின் வன்மம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இதில் அதிகம் அடித்துக்கொள்வது விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள்தான். விஜயின் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு எதிராக ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் களம் இறங்குவார்கள். முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே படம் நன்றாக இல்லை.. மொக்கையாக இருக்கிறது.. படம் பிளாப் என டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.

காலியாக இருக்கும் ஒரு தியேட்டரின் வீடியோவை எடுத்துப் போட்டு ‘பாருங்கள். படம் பார்க்க ஆளே இல்லை’ என்பார்கள். வேறு ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட ஆன்லைன் முன்பதிவு ஸ்கீரீன் ஷாட்டை பகிர்ந்து ‘எல்லாமே க்ரீனாக இருக்கிறது. டிக்கெட் விற்கவே இல்லை’ என்பார்கள். ரஜினி படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும் அதையே செய்வார்கள்.

வேட்டையன் படம் வெளியானபோது விஜய் ரசிகர்கள் வன்மத்துடன் இறங்கி வேலை பார்த்தார்கள். இது படத்தின் வசூலை அதிகமாகவே பாதித்தது. கேட்டால் ‘கோட் படம் வந்தபோது ரஜினி ரசிகர்கள் செய்தது மட்டும் சரியா?’ என்கிறார்கள். இது இப்படியே தொடர்ந்து போய்கொணடே இருக்கிறது.

இப்போது கங்குவா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவால் ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு சூர்யாவும் ஆளாகியுள்ளார். கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட பின்னரும் வேட்டையன் படம் அதே தேதியில் ரிலீஸ் என ரஜினி உறுதியாக இருந்ததால் ஞானவேல் ராஜா மனதுக்குள் கோபம் இருந்தது. ஆனால், அதை அவர் வெளிக்காட்டவில்லை. கங்குவா ரிலீஸ் நவம்பர் 14ம் தேதி என அறிவித்தார்.

ஊடகம் ஒன்றில் ‘சமீபத்தில் ஒரு பெரிய ஸ்டாரின் படத்தில் நடித்த எல்லா நடிகர்களுக்கும் போஸ்டர் போட்டு தனித்தனியாக புரமோட் செய்தார்கள். ஆனால், அது படத்தின் வெற்றிக்கு உதவியதா?’ என கேட்டார். அவர் வேட்டையன் படத்தைத்தான் சொல்கிறார் என ரஜினி ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.

எனவே, ‘கங்குவா படம் வரட்டும் எப்படி வச்சி செய்யுறோம் பாரு’ என டிவிட்டரில் பொங்கி வருகின்றனர். ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு சூர்யா வருத்தம் தெரிவித்தால் கூட ரஜினி ரசிகர்கள் கூலாகி இருப்பார்கள். ஆனால், சூர்யா அதை செய்யவில்லை. எனவே, நவம்பர் 14ம் தேதிக்காக காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்!...

Next Story