படு பிஸியாக இருந்த கவுண்டமணி!.. ரஜினி எடுத்த முடிவு!.. எஜமான் படத்தில் நடந்த சம்பவம்!...

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர் நடிகர் கவுண்டமணி. துவக்கத்தில் பல படங்களில் தனியாகவே நடித்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் செந்திலை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து பல நூறு படங்களில் ஒன்றாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள்.

கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கே கவுண்டமணி - செந்தில் காமெடி முக்கிய காரணமாக இருந்தது. அந்த படம் மட்டுமல்ல. பல படங்களில் கவுண்டமணியின் காமெடியால் ஓடி இருக்கிறது. ராமராஜன், சத்தியராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக் என பல நடிகர்களும் தங்களின் படங்களின் வெற்றிக்கு கவுண்டமணியை நம்பி இருந்தார்கள்.

இதனால் கவுண்டமணி மிகவும் பிசியான நடிகராக மாறினார். ஒரேநாளில் இரண்டு, மூன்று படங்களில் நடிக்கும் நடிகராக மாறினார். நேரத்தை பிரித்து 4 படங்களுக்கு கூட கால்ஷீட் கொடுப்பார். ஒரு படத்திற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளமாக வாங்கிய முதல் காமெடி நடிகர் இவர்தான்.

கோவை அருகேயுள்ள பொள்ளாச்சியில் பிறந்த இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். கவுண்டமணிக்கு பல வருட நாடக அனுபவம் உண்டு. ஆனால், சினிமாவில் கிடைத்தது என்னவோ காமெடி வேடம்தான். ஆனால், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

கவுண்டமணியின் கால்ஷீட்டுக்காக ரஜினி போன்ற பெரிய நடிகர்களே காத்திருப்பார்கள். எஜமான் படத்தில் நடித்தபோது கவுண்டமணி நிறைய படங்களில் நடித்து வந்தார். அவருக்காக ரஜினி காத்திருந்தார். ஒருநாள் ரஜினி வேறொரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது கவுண்டமணி வரவே, அந்த காட்சியை அப்படியே நிறுத்திவிட்டு கவுண்டமணியுடன் நடித்திருக்கிறார் ரஜினி.

இந்த படத்தில் நடிக்க ஏவிஎம் நிறுவனம் கவுண்டமணியை அழைத்து பேசியபோது ரஜினியை விட அதிக சம்பளம் கேட்டார் கவுண்டமணி. அவர்கள் கொடுக்க மறுக்க ‘அப்படின்னா இந்த படத்தில் நான் ஹீரோவா நடிக்கிறேன். ரஜினியை காமெடியனா போடுங்க’ என கெத்தாக சொன்னவர்தான் கவுண்டமணி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story