ராஜ்குமார் பெரியசாமி: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அதற்குக் காரணம் அமரன் திரைப்படம். தமிழில் முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ரங்கூன் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு அமரன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
அமரன் படத்தின் வெற்றி:
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி வரை வசூல் செய்த சாதனை படைத்திருக்கின்றது. மேலும் இப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனின் மதிப்பு மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் என்கின்ற இடத்தை பிடித்திருக்கின்றார். சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இல்லாமல் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்திருக்கின்றது.
தனுஷ் 55:
அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து தனுஷ் 55 ஆவது படத்தை இயக்க இருக்கின்றார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு மற்றும் பூஜை சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக அன்பு தயாரிக்க இருக்கின்றார். நடிகர் தனுஷ் ஏற்கனவே இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த திரைப்படத்தை முடித்த கையோடு தனுஷ் 55 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் ராஜ்குமார் பெரியசாமி இந்த திரைப்படத்தை முடித்தவுடன் பாலிவுட்டில் கால் பதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான பூஷன் குமார் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு ராஜ்குமார் பெரியசாமி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தனுஷ் 55 கதை:
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் 55 திரைப்படம் குறித்து பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘அமரன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய நிஜ ஹீரோவின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
ஆனால் நான் அடுத்து எடுக்க இருக்கும் தனுஷ் 55 என்பது நாம் அறியாத அதாவது நம் சமூகத்தில் பல நன்மைகளை செய்து யாருக்கும் தெரியாத நபராக இருக்கக்கூடியவர். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரமாக தனுஷ் இருப்பார். சமூகத்துடன் இணைந்து பல நன்மைகளை செய்யக்கூடிய ஒரு ஹீரோ பற்றிய கதையாக இப்படம் இருக்கும்’ என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.
