நான் ஒரு சாதாரண தொண்டன்.. தளபதியே எனக்கு தலைவன்!.. படுத்தேவிட்டாரே எஸ்.ஏ.சி!...

by சிவா |
நான் ஒரு சாதாரண தொண்டன்.. தளபதியே எனக்கு தலைவன்!.. படுத்தேவிட்டாரே எஸ்.ஏ.சி!...
X

Vijay TVK: விஜயை ஒரு நடிகனாக உருவாக்கியது மட்டுமில்லை. அவரின் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதை விஜய் மக்கள் இயக்கமாக மாறி அரசியலை நோக்கி விஜயை கொண்டு சென்றதே அவர்தான். எஸ்.ஏ.சி தனது படங்களில் அரசியல்வாதிகளை விமர்சித்து வந்தவர். குறிப்பாக சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என 80களில் தனது திரைப்படங்களில் காட்டியிருக்கிறார்.

விஜய் பிரபலமான நடிகரான பின் அவர் நடிக்கும் படங்களின் கதையை கேட்பது, சம்பளம் பேசுவது, கால்ஷீட் ஒதுக்குவது என எல்லாவற்றையுமே முடிவு செய்தது அவர்தான். ஒருபக்கம், விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகளையும் நியமித்து அதை பலப்படுத்தி வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் விஜய் தனியாக செயல்பட துவங்கினார்.

துப்பாக்கி படத்திலிருந்து விஜயே கதையை கேட்க துவங்கி அவரே எல்லாவற்றையும் முடிவெடுத்தார். அதோடு, தனது அப்பா எஸ்.ஏ.சியுடன் பேசுவதையும் அவர் நிறுத்திவிட்டார். இதனால், எஸ்.ஏ.சியும், அவரின் மனைவி ஷோபாவும் தனி வீட்டில் வசித்து வருகிறார்கள். அதோடு, விஜயை சந்திக்க எஸ்.ஏ.சி. போனாலும் விஜய் அவரை பார்க்காமல் தவிர்த்த சம்பவமெல்லாம் நடந்தது. ஒருமுறை விஜயின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளித்தார் எஸ்.ஏ.சி.

உடனே விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதாக செய்திகள் வேகமாக பரவ ‘இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தனது தந்தையுடன் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது’ என அறிக்கைவிட்டார் விஜய். தந்தையை கூட விஜய் ஒதுக்கி வைத்தது கடும் விமர்சனதிற்கு உள்ளாகவே எஸ்.ஏ.சி உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அவரை சென்று பார்த்தார்.

அதோடு சரி. அதன்பின் விஜய் தனது தந்தையை சென்று பார்க்கவில்லை. விஜய் தவெக கட்சியை துவங்கி புஸ்ஸி ஆனந்த்திற்கு எல்லா பொறுப்பையும் கொடுத்தபோது அதை கடுமையாக விமர்சித்தார் எஸ்.ஏ.சி. புஸ்ஸி ஆனந்த் மிகவும் சின்சியராக இருப்பதை போலவும், கடுமையாக உழைப்பதை போலவும் விஜயிடம் நடித்து வருகிறார். அவரின் தலைமையில் எல்லாம் நடக்கும்வரை கட்சி தேராது என்றும் கூறினார். அதேநேரம், விக்கிரவாண்டியில் விஜய் மாநாட்டை நடத்தியபோது அதில் எஸ்.ஏ.சி கலந்துகொண்டு ‘விஜய் இப்படி பேசுவார் என நானே எதிர்பார்க்கவில்லை’ என பாராட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில், விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது ‘தவெக கட்சியில் நான் ஒரு சாதாரண தொண்டன். இதை செய்.. அதை செய் என தலைவனுக்கு தொண்டன் ஆணையிட முடியாது. குடும்ப அரசியல் இருக்கக்கூடாது என தளபதி உறுதியாக இருக்கிறார். எனவே, அதை சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை’ என சொல்லியிருக்கிறார்.

Next Story