கவினின் 'கிஸ்' டைட்டிலுக்கு இம்புட்டு கதை இருக்கா?.. தாராள மனசுதான் மிஷ்கினுக்கு..!

Actor Kavin: தமிழ் சினிமாவில் கனா காணும் காலங்கள் என்கின்ற சீரியல் மூலமாக சினிமா பயணத்தை தொடங்கிய கவின் அடுத்ததாக சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நடிகர் கவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான கவினுக்கு லிப்ட் என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அடுத்ததாக டாடா என்கின்ற திரைப்படத்தின் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இதனால் தமிழ் சினிமாவில் கவனிக்கதக்க நடிகர்களில் ஒருவராக மாறினார் கவின்.
டாடா திரைப்படத்தின் வெற்றியின் மூலமாக பிரபலமான கவின் அடுத்ததாக ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு சுமாரான வெற்றியை கொடுத்தது. ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கவின் நெல்சன் திலிப்குமார் தயாரித்த பிளடி பெக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை நெல்சன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் சிவபாலன் இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் பெரிய அளவில் விமர்சனத்தை பெறாததால் தோல்வியை சந்தித்தது.
கவின் லைன்அப்: தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் கவின் தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். அந்த வகையில் ஹாய் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் எழுதிய கதையில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்க் திரைப்படமும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்து வரும் திரைப்படம் கிஸ். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழுவினர் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.
இப்படத்திற்கு கிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கின்றது. அதனுடன் சேர்ந்து ஒரு போஸ்டரும் வெளியாகி இருந்தது. அதில் நடிகர் கவினின் கண்கள் மறைக்கப்பட்டது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
கிஸ் தலைப்பின் விளக்கம்: படத்திற்கு கிஸ் என்று தலைப்பு வைத்ததற்கு என்ன காரணம் என டான்ஸ் மாஸ்டர் சதீஷ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது தனக்கு தமிழில் டைட்டில் வைக்க வேண்டும் என்று ஆசை. அது சரியாக பொருந்தியது. கௌதம் மேனன் சார் தனது படங்களுக்கு மிகவும் அழகான தமிழ் தலைப்புகளை வைத்திருப்பார்.
அது மட்டும் இல்லாமல் கவின் நான்கு படங்களிலும் டாடா, லிப்ட், ஸ்டார் தற்போது கிஸ் என நான்கு எழுத்து தலைப்புகளுடன் பணியாற்றுகிறார். ஆங்கில தலைப்பு வைக்க வேண்டும் என்கின்ற ஐடியா இல்லை. ஆனால் இந்த டைட்டில் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
மேலும் கிஸ் படத்தின் டைட்டில் உரிமையை மிஸ்கின் அவர்கள் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக அந்த தலைப்பை அவர் வைத்திருக்கிறார். நான் அவரை அணுகி படத்தின் தலைப்பை கேட்டபோது எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எனக்கு கொடுத்துவிட்டார். அதனால் தான் படத்தின் பூஜையின் போது முதல் காட்சியை அவரை எடுக்க சொன்னேன்' என்று கூறியிருந்தார்.