இளசுகளின் தூக்கத்தை கெடுத்த அந்தப் பாடல்! பிடிக்கலனு கூறிய இயக்குனர்.. இசைஞானி செய்த மேஜிக்
இளையராஜா - இந்த ஒரு பெயர் 80, 90கள் காலகட்டத்தில் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் கைக்குள் அடக்கி ஆண்டது. பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் இவர் காலடியில்தான் கிடந்தனர். தன் இசையை மட்டும் வைத்து கோலிவுட்டையே ஒரு ஆட்டம் காண வைத்தவர் இளையராஜா. அது இன்றுவரை பெரிய பிரபஞ்சமாக மாறியிருக்கின்றது. இசைஞானி என்ற பெயரோடு ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் இளையராஜா.
அன்னக்கிளி என்ற ஒரே ஒரு படம். ஒரு பெரிய புரட்சியையே இசையில் ஏற்படுத்தியது. அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற பழம்பெரும் இசைக்கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அன்னக்கிளி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை தனதாக்கி கொண்டார் இளையராஜா. அந்தப் படத்தின் மூலம்தான் முதன் முதலில் அறிமுகமானார்.
அதிலிருந்து தமிழில் பெரிய பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி, கமல் இவர்களின் படங்களுக்கு இவர்தான் இசை. அது மட்டுமில்லாமல் சத்யராஜ், பிரபு, கார்த்தி, மோகன் போன்ற எண்ணற்ற நடிகர்களின் படங்களுக்கும் அவ்வப்போது இசையமைத்து வந்தார் இளையராஜா. அந்தக் காலத்தில் இசையில் இவரை எதிர்த்து யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் செல்வமணி இளையாராஜா குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்துக்கு இது நூறாவது திரைப்படம். மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம். படம் ஹிட்டானாலும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாடல்தான்.
ஆனால் இந்தப் பாடல் செல்வமணிக்கு பிடிக்கவில்லையாம். இதை இளையராஜாவிடம் சொல்ல என்ன பண்ணாலும் பிடிக்கவில்லை என்றால் என்னதான் பண்ணுவது என இளையராஜா கேட்டிருக்கிறார். அதற்கு செல்வமணி ‘ஷோலை படத்தில் வரும் மெகபூபா மெகபூபா பாடல் மாதிரி வேண்டும். அவ்வளவுதான்’ என சொல்லியிருக்கிறார். உடனே இளையராஜா போனை கட் செய்து விட்டு முதலில் டிராக்கை அனுப்பி வைத்தாராம்.
அந்த டிராக்கை வைத்து படப்பிடிப்பை எடுக்க அதன் பின் வாய்ஸோடு அனுப்பி வைத்திருக்கிறார். இப்படித்தான் அந்தப் பாடல் வந்தது என செல்வமணி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இன்று எந்தவொரு ஊர் திருவிழாவானாலும் இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது. அந்தளவுக்கு அந்தப் பாடல் பிரபலமானது.