இந்த பாட்டுக்கு நடிக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடு!.. சிவாஜியையே ஆட்டிப்படைத்த டி.எம்.எஸ்!...

பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகர் சிவாஜி கணேசன் அதன்பின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். இவர் ஏற்காத வேடமே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்து நடிகர் திலகமாக மாறினார்.

சிவாஜி கணேசனுக்கு துவக்கத்தில் சில பாடகர்கள் பாடினாலும் ஒரு கட்டத்தில் டி.எம்.சவுந்தரராஜன் குரல் அவருக்கு பொருந்திப் போனது. அதன்பின் பல வருடங்கள் சிவாஜியின் ஆஸ்தான பாடகராக டி.எம்.எஸ் மட்டுமே இருந்தார். சிவாஜிக்கு எப்படி பாட வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

சிவாஜிக்கு ஏராளமான காதல் மற்றும் தத்துவ பாடல்களை டி.எம்.எஸ் பாடி இருக்கிறார். சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடினால் அது சிவாஜியே பாடுவது போல இருக்கும். டி.எம்.எஸ் பாடகர் மட்டுமல்ல. அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். பாடலின் சூழ்நிலையை சொல்லிவிட்டால் அந்த மூடுக்கே போய் பாடிவிடுவார். அப்படி ஒருமுறை அவர் பாடிய பாடல் சிவாஜியை அசர வைத்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

‘கௌரவம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்காக வந்த சிவாஜி அந்த பாடலை கேட்டார். பொதுவாக பாடலை ஒருமுறைதான் கேட்பார் சிவாஜி. ஆனால், அந்த பாடலை 11 முறைக்கும் மேல் கேட்டார். அதன்பின் சிந்தனையில் ஆழ்ந்த அவர் அப்படத்தின் இயக்குனர் வியட்நாம் சுந்தரத்தை அழைத்து ‘இந்த பாட்டில் நடிக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடு’ என சொல்ல சுந்தரமோ ‘என்னண்ணே எதாவது பிரச்சனையா?’ என கேட்டிருக்கிறார்.

சிவாஜியோ ‘இந்த பாட்டை டி.எம்.எஸ் ஒரு தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சி பிரவாகத்தோடு பாடியுள்ளார். பாவம், ஆக்ரோஷம் என பல பரிமாணங்களை இந்த பாடலில் காட்டி இருக்கிறார். அவர் எனக்கு பெரிய சவாலை வைத்து விட்டு போயிருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்ததால் நான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால்தான் அவரின் சவாலை சமாளிக்க முடியும்’ என சொல்லிவிட்டு ஓய்வு அறைக்கு போய்விட்டார்.

அதன்பின் சில மணி நேரங்கள் கழித்தே சிவாஜி அந்த பாடலுக்கு நடித்து கொடுத்தார். அதுதான் டி.எம்.எஸ் பாடிய ‘நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?’ பாடலாகும். அந்த பாடலை பார்த்தால் டி.எம்.எஸ்-ஐ தாண்டி பர்பாமன்ஸ் செய்ய வேண்டும் என சிவாஜி நடித்திருப்பது புரியும்.

Related Articles
Next Story
Share it