கலைத்தாயின் இளைய மகன்யா நீர்!.. நடிப்பு அரக்கனே பாராட்டியது யாரை தெரியுமா?...
வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட். இரண்டு படங்களுமே ஹிட் அடிக்கவே அடுத்து இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி நடித்தார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் வில்லனாக நடிக்க துவங்கினார். இது அவருக்கு நன்றாகவே செட் ஆனது. விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார்.
அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படத்தில் சூப்பர் வில்லனாக வந்து அசத்தினார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன்பின் மார்க் ஆண்டனி படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரசிகர்கள் இவரை நடிப்பு அரக்கன் என சொல்ல துவங்கிவிட்டனர்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா எக்ஸ் படத்திலும் அற்புதமாக நடித்து சூப்பர்ஸ்டார் ரஜினியிடமே பாரட்டு வாங்கினார். இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லனாக மாறிவிட்டார். இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். இந்தியன் 3-யில் இவருக்கு முக்கிய வேடம் என சொல்லப்படுகிறது.
இப்போது அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நேற்று மதுரையில் படத்தின் கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியை அருண்குமார் படமாக்கினார். படப்பிடிப்பு நடந்த இடத்தில் 10 நாட்கள் தனது உதவியாளர்களுடன் பயிற்சி எடுத்தார். அதன்பின் எங்களை கொண்டு சென்று 3 இரவுகள் ஒத்திகை பண்ண வைத்தார்.
அதன்பின் நேற்று இரவு படப்பிடிப்பை துவக்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முடிந்து நினைத்தபடி காட்சிகளை எடுத்து சாதித்துவிட்டார். அவரைப்பற்றி ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘கலைத்தாயின் இளைய மகன்யா நீர். தயாரிப்பாளர் சிபுதமீனுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.