ஷங்கரை படாத பாடு படுத்திய எஸ்.ஜே.சூர்யா!. கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!...
Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் ஷங்கர். தமிழில் முதல் முறையாக இவர்தான் அதிக பட்ஜெட்டில் படமெடுக்க துவங்கியவர். இதனால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்றும் சொல்வார்கள். குறிப்பாக பாடல் காட்சிகளில் இவர் செய்யும் செலவில் ஒரு மினி பட்ஜெட் படத்தையே எடுத்துவிடலாம்.
ரயிலுக்கு பெயிண்ட் அடிப்பது, பாலத்திற்கு பெயிண்ட் அடிப்பது, நடனமாடுபவர்களுக்கு பெயிண்ட் அடிப்பது என பல விஷயங்களை செய்வார். குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சென்று பாடல் காட்சிகளை எடுப்பார். இவர் செய்யும் செலவுகளை பார்த்து தயாரிப்பாளர்கள் கதறுவார்கள்.
ஏனெனில், படம் ஓடவில்லை எனில் தலையில் துண்டுதான். அதனால்தான் ஒருமுறை ஷங்கரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர் அடுத்து ஷங்கர் பக்கம் போகமாட்டார்கள். எனவே, புதுப்புது தயாரிப்பாளரை தேடி பிடிப்பார் ஷங்கர். கமலை வைத்து ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் வெற்றிப்படமாக அமையவில்லை.
ஒருபக்கம், ஆந்திராவில் அதிக பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தில் ராஜுவுக்கு வலை விரித்தார் ஷங்கர். அப்படி உருவான படம்தான் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், கியாரா அத்வானி, நாசர், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கேம் சேஞ்சர் படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் படம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் எஸ்.ஜே.சூர்யா என்கிறார்கள். கடந்த 2 வருடங்களாகவே மிகவும் பிஸியான நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. கேம் சேஞ்சர் படத்தில் அவருக்கு வில்லன் வேடம்.
ஆனால், அவரால் சரியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். அவரை அழைத்து வந்து நடிக்க வைப்பதற்குள் ஷங்கர் நொந்து போய்விட்டாராம். தற்போது ஒரு வழியாக படம் முடிந்துவிட்டது. அதோடு, 2025 ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.