Categories: Cinema News latest news

தலைப்புக்கு வந்த எதிர்ப்பு!. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. எஸ்.கே 25 அப்டேட்!..

SK 25 :விஜய் டிவியில் ஆங்கராக இருந்து அதன்பின் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். மிகவும் குறுகிய காலத்தில் அவரின் சீனியர் நடிகர்களை ஓரங்கட்டி மேலே போனவர் இவர். வேகமாக வளர்ந்து ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இவர் மாறினார்.

இவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. இதுவரை காதல் மற்றும் காமெடி கதைகளில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் அமரன் படம் மூலம் சீரியஸான கதைகளிலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்துவிட்டார்.

இந்நிலையில்தான் சுதா கொங்கராவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புறநானூறு என்கிற தலைப்பில் சூர்யா நடிக்கவிருந்த திரைப்படம் இது. 1965ம் வருடம் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை என்பதால் அதில் சூர்யா சில மாற்றங்களை செய்ய சொல்ல சுதா கொங்கரா மறுத்துவிட்டார்.

அதனால், அந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். அதோடு, ஜெயம் ரவி மற்றும் அதர்வா போன்றவர்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு பராசக்தி என்கிற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலைப்பை மாற்றவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறர்கள்.

இந்நிலையில்தான் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. பராசக்தி தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் தலைப்பு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது பராசக்தி தலைப்பே நீடிக்கிறதா என்பதும் தெரிந்துவிடும்.

Published by
சிவா