அர்ஜூனிடம் மண்டி போட்டு கோரிக்கை வைத்த எஸ்.பிபி.. அச்சு பிசராமல் செஞ்சிவிட்டாரே!

by ராம் சுதன் |

கர்ணா படத்தில் ஒரு பாடலைப் பாடிவிட்டு அர்ஜூனிடம் பாடகர் எஸ்.பி.பி முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்தாராம்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கதையை மையமாக வைத்து செல்வா இயக்கத்தில் 1995-ல் வெளியான படம்தான் கர்ணா. அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களுக்கு அந்த காலகட்டத்தில் தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தில் இடம்பெற்றிருந்த மலரே மௌனமா பாடல் இன்றளவும் கிளாசிக் மெலடியாகக் கொண்டாடப்படும் பாடல்களுள் ஒன்று. வித்யாசாகர் தெலுங்கில் இசையமைத்திருந்த சிறுநாவுள்ள வரமிஸ்தவா படத்தின் ஒகடே கோரிகா பாடலை அடிப்படையாக வைத்துதான் இந்தப் பாடலையும் உருவாக்கியிருந்தார்.

அந்த பாட்டுக்கு வித்யாசாகர் ட்யூன் போட்டதும், எஸ்.பி.பி - ஜானகியைப் பாட வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி முதலில் தான் பாட வேண்டிய பகுதியை ஜானகி பாடி முடித்திருக்கிறார். அதன்பின்னர், பாட வந்த எஸ்.பி.பி ஜானகியின் குரலில் அந்தப் பாடலைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார். பாடல் ஒலிப்பதிவின்போது அடிக்கடி அந்த அம்மா அளவுக்கு பாடியிருக்கேனா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தாராம் எஸ்.பி.பி.

அதேபோல், பாடி முடித்ததும் நேராக அர்ஜூன், வித்யாசாகர் அமர்ந்திருந்த கன்சோல் அறைக்கு வந்து அப்படியே முழங்காலிட்டிருக்கிறார் எஸ்.பி.பி. பாட்டு அவ்வளவு அருமையாக வந்திருக்கிறது. மெட்டும் மென்மையாக இதயத்தை வருடும்படி இருக்கிறது. இந்த பாடலுக்கான காட்சிகளை மட்டும் எப்படியாவது வெகு சிறப்பாக எடுத்துவிடுங்கள் அர்ஜூன் என்று கோரிக்கையும் வைத்தாராம். அந்தப் பாடலை கர்ணா படக்குழுவினர் குலுமணாலி சென்று காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story