பிப்ரவரி 21-ல் ரிலீஸாகும் 3 திரைப்படங்கள்!.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டிராகன்!...

by சிவா |
பிப்ரவரி 21-ல் ரிலீஸாகும் 3 திரைப்படங்கள்!.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டிராகன்!...
X

Feb 21 release movies: பொதுவாக புதிய திரைப்படம் வெள்ளி அல்லது வியாழக்கிழமைகளில் வெளியாகும். பல வருடங்களாகவே வெள்ளிக்கிழமையில் மட்டும் புதிய படங்கள் ரிலீஸாகி வந்தது. சில வருடங்களுக்கு முன்பு வியாழக்கிழமையே வெளியிட்டால் வார இறுதி வரை உள்ள 4 நாட்களில் வசூலை அள்ளிவிடலாம் என கணக்குப்போட்டு சில படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியாக துவங்கியது.

தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் போன்ற விடுமுறைகளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். ஏனெனில், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் என்பதால் தொடர் விடுமுறையில் கல்லா கட்டிவிடலாம் என்பதுதான் கணக்கு. மற்ற நாட்களில் சின்ன நடிகர்களின் படங்கள் வெளியாகும்.

டிராகன்: அந்தவகையில் பிப்ரவரி 21ம் தேதியான நாளை என்னென்ன படங்கள் வெளியாகிறது என பார்ப்போம். லவ் டுடே படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம்தான் டிராகன். இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இளசுகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி டான் படம் போல இருக்கிறது என்கிற இமேஜும் உருவாகியுள்ளது. ஆனால், அதை மறுத்துள்ள அஸ்வத் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும் என கூறியிருக்கிறார். இந்த படத்தில் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், சினேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு லியோ ஜேம்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: அடுத்து, தனுஷின் இயக்கத்தில் அவரின் சகோதரி மகன் பவிஷ் நடித்துள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படமும் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ரம்யா ரங்கநாதன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வழக்கமான காதல் கதையை தனது ஸ்டைலில் தனுஷ் எடுத்திருக்கிறார்.

அடுத்து சமுத்திரக்கனி நடித்துள்ள ராமம் ராகவம் என்கிற படமும் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தை தன்ராஜ் கொரனானி என்பவர் இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படம் பெரிய வரவேற்பை பெறுமா என்பது சந்தேகம்தான் என்பதால் டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இந்த 2 படங்களின் மீதுதான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Next Story