பார்த்திபனை காப்பாற்றிய இந்தியன் 2 பட ரிசல்ட்!.. மனுஷன் இப்ப ஹேப்பி!.. நல்லது நடந்தா சரி!..
இயக்குனர் பாக்கியராஜிடம் சினிமா கற்றவர் பார்த்திபன். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் உதவியாளராக வேலை பார்த்தவர். பாக்கியராஜை போல வித்தியாசமாக யோசிப்பவர் இவர். தனது முதல் படமான புதிய பாதை மூலம் கவனம் ஈர்த்தவர். சினிமாவில் தனது முதல் படம் முதலே சவால்களை சந்தித்து வருபவர் இவர்.
புதிய பாதை படக்கதையை ரஜினி, கமல் என பலரிடமும் சொல்லி யாரும் நடிக்கமால் அதன்பின் அவரே ஹீரோவாக நடித்தார். முதல் படமே சூப்பர் ஹிட். அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். உள்ளே வெளியே போன்ற கமர்ஷியல் படங்களை எடுத்தாலும் சுகமான சுமைகள், ஹவுஸ்புல், குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் போன்ற கலைப்படங்களை இயக்கியவர் இவர்.
இதனால், நிறைய பண இழைப்பையும் சந்தித்திருக்கிறார். ஆனால், போராடி போராடி மீண்டும் தனக்கு பிடித்த திரைப்படங்களை எடுத்து வருகிறார். இரவின் நிழலுக்கு பின் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம்தான் டீன்ஸ். குழந்தைகளின் உலகத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். மேலும், ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே இந்த படம் பற்றி பல தகவல்களை பார்த்திபன் தனது சமூகவலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் சொல்லி வந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவான இந்தியன் 2 படம் வெளியான கடந்த 12ம் தேதி பார்த்திபனின் டீன்ஸ் படமும் வெளியானது.
‘இந்தியன் 2 போன்ற ஒரு பெரிய படம் வெளியாகும்போது எதற்கு உங்கள் படத்தை வெளியிடுகிறீர்கள்?’ என கேட்டபோது ‘இந்தியன் 2 படம் 800 தியேட்டரில் வெளியானால் எனது டீன்ஸ் படம் 200 தியேட்டர்களில் வெளியாகட்டும். அது எனக்கு போதும்’ என தத்துவம் சொன்னார். அவர் சொன்னமாதிரியே மிகவும் குறைவான தியேட்டர்களில் டீன்ஸ் வெளியானது. அதோடு, இந்தியன் 2 புயலில் டீன்ஸ் படம் பற்றி ரசிகர்கள் யாரும் பேசவே இல்லை. எனவே, பல ஊர்களில் டீன்ஸ் படத்திற்கு கூட்டம் இல்லை.
ஆனால், இந்தியன் 2 படம் நன்றாக இல்லை என் பரவலாக எல்லோரும் சொல்லும் நிலையில் இப்போது டீன்ஸ் படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மல்டி பிளக்ஸ்களில் 2 காட்சிகளை அதிகரித்திருக்கிறார்கள். இது பார்த்திபனை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்தியன் 2 படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் டீன்ஸ் படத்திற்கு கூட்டம் அதிகரிக்கும் என காத்திருக்கிறார் பார்த்திபன்.