ஓவர் டிக்கெட் ரேட்!. தியேட்டரில் காத்து வாங்கும் வேட்டையன்!. இதெல்லாம் தேவையா?!...
Vettaiyan: லைக்கா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் இயக்கி ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் என்கவுண்ட்டர் சரியா? தவறா? என பேசியிருக்கிறார்கள். இந்த படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் ஓரளவுக்கு வசூலை பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் 17 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்தது. அதன்பின் எதிர்பார்த்த வசூல் இல்லை. அமிதாப்பச்சன் நடித்திருந்தும் ஹிந்தியில் இப்படம் வசூலை பெறவில்லை.
அதேநேரம், ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகத்தில் முதல் நாளை விட அதிக வசூலை வேட்டையன் படம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 13ம் தேதியான நேற்று வேட்டையன் 21 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், இன்று முதல் வருகிற வியாழன் வரை சென்னை உள்ளிட்ட பல ஊர்களிலும் கடும் மழை பெய்யும் என சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த வாரம் முதல் வேட்டையன் படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தீவிர ரஜினி ரசிகர்கள் வேட்டையன் படம் 650 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆயிரம் கோடியை தொடும் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம், சிங்கிள் தியேட்டர்கள் என சொல்லப்படும் மல்டிபிளக்ஸ் இல்லாத தியேட்டர்களில் வேட்டையன் படம் வசூலே இல்லை என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் மல்டிப்பிளக்ஸ் தியேட்டரில் டிக்கெட் விலை 190 ரூபாய். தனி தியேட்டர்களில் 110 ரூபாய் அல்லது 100 ரூபாய்.
ஆனால், தனி தியேட்டர்களிலும் 190 விலையே சொல்வதால் பலரும் ’இந்த விலைக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு போகலாம்’ என முடிவெடுத்து அங்கு சென்றுவிட்டனர் என சொல்லப்படுகிறது. வேட்டையன் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உலகமெங்கும் 240 கோடியை வசூல் செய்திருப்பதாக லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.