ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர்!.. செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஜவ்வு!.. வேட்டையன் விமர்சனம் இதோ!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:01  )

லைகா நிறுவனத்துக்கு ஒருவழியாக ஒரு வெற்றிப் படமாக ரஜினிகாந்தின் வேட்டையன் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியானது.

அதியன் எனும் கதாபாத்திரத்தில் என்கவுன்ட்டர் செய்யும் ஹண்டராக வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்பத்திலேயே என்கவுன்ட்டர் தவறான செயல் என பாடம் எடுக்கும் நீதிபதி கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் வருகிறார்.

போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் நடித்துள்ள நிலையில், பேட்டரி எனும் கதாபாத்திரத்தில் பகத் ஃபாசில் வரும் காட்சிகள் எல்லாமே ஜாலியாகவும் சீரியஸான கதையில் கொஞ்சம் காமெடியையும் தூவி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

சரண்யா டீச்சர் துஷாரா விஜயனை துடிக்க துடிக்க ரேப் செய்து கொலை செய்து விட குற்றவாளியை தேடிப் பிடித்து என்கவுன்ட்டர் செய்கிறார் அதியன். ஆனால், நீ புடுங்குனது பூரா தேவையில்லாத ஆணி என்பது போல அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் போட்டுத் தள்ளியது அப்பாவி நபரை என்பதை புரிய வைக்க படம் திசை மாறுகிறது.

அது வரை பரபரப்பாக சூடு பிடித்து வந்த படம் இரண்டாம் பாதியில் கதைக்கு செல்கிறோம் என்கிற பெயரில் கொஞ்சம் பிளேடு போட்டு விட்டனர். கடைசியில் ஒரு வழியாக அனைத்தையும் சரி செய்து நிஜ வில்லனை வேட்டையாடுகிறார் வேட்டையன்.

அனிருத்தின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக மனசிலாயோ பாடலை இயக்குனர் வைத்தது சிறப்பு. இந்த வயதிலும் ரஜினிகாந்த் இப்படி ஆடுவதும் சண்டை போடுவதையும் பார்க்கவே ரசிகர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கண்ணாடியை கழட்டி தூக்கிப் போட்டு ஸ்டைல் காட்டும் காட்சியிலும், கையில் வைத்திருக்கும் மடக்கும் ஸ்மார்ட் போன் என ஸ்டைல் காட்சிகளுக்கு குறைவே இல்லை. வலிமை மற்றும் துணிவு படங்களில் எச். வினோத் ஹீரோயினுக்கு வைத்த காட்சியை போல இதிலும் மஞ்சு வாரியருக்கு ஒரு சிறப்பான தரமான காட்சி உள்ளது.

கொஞ்சம் ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் எஃபெக்ட் தெரிந்தாலும் இந்த காட்சி ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் வில்லன் யார் என்று தெரிந்த பின்னரும், படத்தை ரொம்பவே சுத்த விடுவது மைனஸ் ஆக தெரிகிறது. அனைத்தையும் தாண்டி ரஜினி படம் என்பதால் நிச்சயம் பார்க்கலாம்.

வேட்டையன் - வெற்றி!

ரேட்டிங் - 3.75/5

Next Story