நான் என்ன படம் எடுக்கணும்னு நீ சொல்லாத!.. வேட்டையன் டைரக்டர் இப்படி பொங்கிட்டாரே!...
Vettaiyan: அடிப்படையில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவர் ஜெய்பீம் பட இயக்குனர் தா.ச.ஞானவேல். சினிமாவில் நுழைந்து இயக்கம் கற்று 'கூட்டத்தில் ஒருவன்' என்கிற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய படம்தான் ஜெய்பீம்.
பல வருடங்களுக்கு முன்பு நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது இருளர் குடும்பம் ஒன்றின் மீது காவல் அதிகாரிகள் பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்தனர். இதில், இருளர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தை கதையாக எடுத்து திரைக்கதை அமைத்திருந்தார் ஞானவேல்.
நீதிபதி சந்துரு வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்த படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு, சமூகவலைத்தளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இருளர் இனத்திற்கு ஆதரவாக அரசு சில திட்டங்களையும் கொண்டு வந்தது. இதுவே ஜெய்பீம் படத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டது.
அதன்பின் லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஞானவேல். இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு முன்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஏனெனில், ஜெயிலர் ஹிட்டுக்கு பின் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள படம் இது.
ஒருபக்கம், சமூக கருத்துள்ள படத்தை எடுக்கும் ஞானவேல் ரஜினியை வைத்து எப்படி படம் எடுப்பார்? அது ரஜினிக்கு செட் ஆகுமா? அவர் மாஸ் படங்களில்தான் நடிப்பார் என்றெல்லாம் பலரும் பேசினார்கள். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த ஞானவேலிடம் இது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் சொன்ன ஞானவேல் ‘நான் சொன்ன கதை ரஜினி சாருக்கு பிடித்திருந்தது. அதை தயாரிக்க ஒரு நிறுவனம் முன் வந்தது. அதில் நான் என்ன பண்ண முடியுமோ அதை செய்திருக்கிறேன். அதுதான் என் எல்லை. அதைத்தாண்டி யோசிக்க என்ன இருக்கிறது?. இவர் என்ன நினைப்பார்?. அவர்கள் என்ன நினைப்பார்கள்? என யோசித்தால் எதையுமே செய்ய முடியாது. நான் என்ன எடுத்திருக்கிறேனோ அதுபற்றி நீங்கள் பேசுங்கள். ஆனால், நான் என்ன எடுக்க வேண்டும் என நீங்கள் பேசாதீர்கள்’ என பொங்கியிருக்கிறார்.