இந்தியன் 2 ஒடலனா என்ன!.. நாங்க இருக்கோம்.. வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 திரைப்படங்கள்..

by ராம் சுதன் |

ஒரு படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவிட்டால் உடனே அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிடுவது தமிழ் சினிமாவின் வழக்கம். அப்படி எடுக்கும் சில படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் அந்த படத்திற்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்தாண்டு இரண்டு படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் மட்டுமே வெளியாகின.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படங்கள். இதில் அரண்மனை 4 நல்ல ஒரு வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் இந்தியன் 2 படம் மொத்தமாக ஏமாற்றியது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் எந்தெந்த படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் சர்தார். அந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு இப்போதுதான் நடந்து கொண்டிருக்கிரது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் கைதி. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2025 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது.

அடுத்ததாக விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஷாலே எழுதி இயக்கி நடிக்க இருக்கிறார். அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இது ஜெயம் ரவி கெரியரில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இப்போது ஜெயம் ரவி ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் போன்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இதற்கடுத்தபடியாக தனிஒருவன் 2 படத்தில் இணைய இருக்கிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகின்றது.

அதே போல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியாக 'இன்று நேற்று நாளை 2', 'மாயவன் 2', 'சூது கவ்வும் 2', 'பீட்சா 4', 'காளிதாஸ் 2' , இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி 2017-ம் வெளியாகியிருந்த 'இவன் தந்திரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது தயாராகி வருகிறது.

Next Story