இதெல்லாம் தப்பு!.. சூர்யாவை கெடுத்ததே லோகேஷ் கனகராஜ்தான்!.. கொந்தளிக்கும் பிரபலம்..

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஹீரோயிசத்தை காட்ட சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதை இயக்குனர்கள் பல வருடங்களாக செய்து வருகிறார்கள். இதை அதிகம் செய்தது ரஜினிதான். சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடிப்பதை அவரின் பல திரைப்படங்களில் பார்க்கலாம்.

பொதுவாக சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் ஒன்றை செய்தால் அதை நாமும் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையும், ஆவலும் பல ரசிகர்களுக்கும் வரும். அப்படி ரஜினியை பார்த்து ஒரு சமூகமே கெட்டுப்போனது என சொல்பவர்களும் பலர் இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் ரஜினியும் அதை புரிந்துகொண்டு தனது படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வராமல் பார்த்துக்கொண்டார்.

சினிமாவில் புகை மற்றும் மது அருந்தும் காட்சி வரும்போது இது உடல் நலத்திற்கு கேடு என கேப்ஷனும் போடப்படுகிறது. படத்தின் டைட்டில் கார்டுக்கு முன்பும் சொல்லப்படுகிறது. ஆனால், திரையில் தனக்கு பிடித்த நடிகர் புகை பிடிக்கும்போதும், மது அருந்தும்போதும் அதை அப்படியே பின்பற்றும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தற்போது இந்த சர்ச்சையில்தான் சூர்யா சிக்கி இருக்கிறார். சிவக்குமாருக்கு சிகரெட் குடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ கிடையாது. அதை செய்யக்கூடாது என பல மேடைகளிலும் அவர் பேசி வருகிறார். ஆனால், சூர்யா பிறந்த நாளுக்கு வெளியான அவரின் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் அவர் ஸ்டைலாக புகைப்பிடிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். சினிமாவில் விஜய் சிகரெட் பிடிப்பதை விமர்சித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ராஜேஸ்வரி என்கிற பெண் அரசியல்வாதி இப்போது சூர்யா மீதும் புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இதுபற்றி வலைப்பேச்சு அந்தணன் சூர்யா மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு சூர்யாவை சந்தித்த ஏவிஎம் சரவணன் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நீ நடிக்கக் கூடாது என சத்தியமே வாங்கினார். சூர்யாவும் சில படங்கள் அதில் கடைபிடித்தார். ஆனால், விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் ரோலக்ஸாக வரும் சூர்யா வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு நடித்தார். ரசிகர்களிடம் இது அதிக வரவேற்பை பெற்றது.

.அதனால்தான் இப்போது மீண்டும் சூர்யா அதுபோன்ற காட்சியில் நடித்திருக்கிறார். சூர்யாவை கெடுத்தது லோகேஷ் கனகராஜ்தான். யார் சொன்னாலும் சூர்யா யோசித்திருக்க வேண்டும். அந்த காட்சியில் நடிக்கும்போது ஏவிஎம் சரவணனின் நினைவு அவருக்கு வந்திருக்க வேண்டும். ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக ஒரு தவறான காட்சியில் சூர்யா நடித்திருக்கக் கூடாது’ என அவர் பேசியிருக்கிறார்.

Next Story