தீபாவளிக்கு வெளியாகும் 3 திரைப்படங்கள்!.. எந்த படம் தேறும்?!. வாங்க பார்ப்போம்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:30  )

Diwali release tamil movies: தமிழர்களுக்கு பண்டிகை என்றாலே புது உடை, இனிப்பு, சாமி வழிபாடு, விருந்து என எல்லாம் முடிந்தால் அடுத்து வருவது சினிமாதான். சினிமாவுக்கும் தமிழர்களுக்கும் இடையே பெரிய பந்தம் இருக்கிறது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் தமிழர்களின் வாழ்வோடு அது நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.

எனவேதான் சினிமா பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான உணர்வாகவே இருக்கிறது. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் 10 புதிய படங்கள் வெளியாகும். அதில் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, ராமராஜன் என பலரின் படங்கள் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அது குறைந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் இல்லை. இந்நிலையில், என்னென்ன படங்கள் வெளியாகிறது? எந்த படங்களின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

ஜெயம் ரவியின் பிரதர் படம் வெளியாகிறது. இந்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகனும், ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகாவும் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் ஜாலியாக படமெடுப்பவர். ஆனாலும், இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘மக்காமிஷி’ பாடல் சூப்பர் ஹிட் அடித்து பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த படத்திற்கு புரமோஷனே செய்யப்படவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் இப்படம் தொடர்பான செய்திகளையே பார்க்க முடியவில்லை. எனவே, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அடுத்து, இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் அவரின் உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள படம்தான் பிளடி பெக்கர். இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும், பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரதர் படத்தை ஒப்பிடும்போது பிளடி பெக்கர் படத்திற்கு ரசிகர்களிடம் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த தீபாவளிக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் எனில் அது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம்தான். நடிகர் கமல் இப்படத்தை தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளை வேட்டையாடும்போது குண்டடி பட்டு மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதையாகும். இந்த படத்தில், சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

மிகவும் அதிகமான தியேட்டர்களில் அமரன் படம் வெளியாகவுள்ளது. எப்படி பார்த்தாலும் தீபாவளி ரிலீஸில் அமரன் படமே அதிக வசூலை பெறும் என நம்பலாம். இந்த படத்தில் இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த மூன்று படம் போக துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் வெளியாகிறது. இது தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 4 படங்களுமே வருகிற 31ம் தேதி தீபாவளி அன்றே தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

Next Story