14 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எந்திரன்... ரோ...போ!
14 ஆண்டுகளைக் கடந்தும் ரோபோ என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது எந்திரன் படம் தான். சிட்டி ரோபோவாக வந்து சூப்பர்ஸ்டாராக வந்து ரஜினி அசத்தியிருப்பார். அந்த எந்திரன் படம் வெளியாகி நேற்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.
'இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே' என்று அத்தனை காதல் உணர்ச்சிகளையும் ரோபோ கொட்டி விட்டது. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த உணர்வு தான் காரணம் என்றால் மிகையாகாது. 2010ல் ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் வெளியானது இந்தப் படம்.
ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து அசத்தினார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் நடித்து அசத்தியிருந்தார். வில்லத்தனம் செய்யும் சிட்டி ரோபோ ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதற்குக் காதல் வரும்போது நம்மையும் அறியாமல் ஒரு பரவசம் ஏற்படுகிறது.
கடைசியில் தன்னோட நிலையை அறிந்து உருகி ஒவ்வொன்றாக கழட்டிப்போட்டு தன் கதையை முடிக்கும்போது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அனுதாபத்தைத் தந்து விடுகிறது ரோபோ. படத்தின் சாகச காட்சிகளில் ரஜினி மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இந்தப் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நன்றாக வேலை செய்துள்ளது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். புதிய மனிதா, காதல் அணுக்கள், இரும்பிலே ஒரு இதயம், அரிமா அரிமா, கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் உள்ளன. படத்திற்கு கதை எழுதியவர்கள் பாலகுமாரன், சுஜாதா, ஷங்கர் ஆகியோர். படத்தில் காமெடியனாக சந்தானம் கலக்கி இருப்பார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து இருந்தது.
படத்தில் டிரெய்ன் பைட், கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருக்கும். சிறுவர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருந்தது. அதே போல தாய்மார்களுக்கும் மிகவும் பிடித்து இருந்தது. துளி கூட ஆபாசம் இல்லாமல் இருந்ததால் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. வசூலில் சாதனையும் படைத்தான் எந்திரன். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியானது.