2024ல் ட்ரோலில் சிக்கிய பிரபலங்கள்... கமல், ரஜினியைக் கூட விட்டு வைக்கலையே..!
பழைய காலம் மாதிரி இப்போது இல்லை. இது கணினியுகமாகி விட்டது. நெட்டிசன்கள் பெருகி விட்டனர். அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அது சினிமா என்றாலும் சரி, அரசியல் ஆனாலும் சரி விட்டு வைப்பதில்லை. மீம்ஸ்களும், ட்ரோல்களும் போட்டு எவ்வளவு பெரிய பிரபலமானாலும் பங்கம் செய்து விடுகின்றனர். அப்படி 2024ல் ட்ரோலில் சிக்கிய பிரபலங்கள் லிஸ்ட் இதோ.
கமல்
2024ன் துவக்கத்தில் இருந்தே தமிழ்சினிமாவில் பெரிய அளவில் எந்த ஒரு படமும் ஹிட்டாகவில்லையே என்று ஒரு பெரிய குறை இருந்தது. லைகா நிறுவனத்திற்கு 2 பெரிய படங்கள் வருகிறது. அதில் கமலின் இந்தியன் 2வைத்தான் பெரிதும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னாங்க.
ஆனால் அந்தப் படம் ப்ளாப் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக கமல் ரசிகர்களே படம் சரியில்லை என்றார்கள். கமல் கூட 3ம் பாகத்திற்காகத் தான் இந்தப் படத்தில் நடித்தேன் என்றும் சொல்லி இருந்தாராம். அதைப் போல இந்தப் படத்தின் நீளம் அதிகமானதால் கடைசி நேரத்தில் அதை இரண்டாகப் பிரித்து விட்டார் ஷங்கர்.
அதனால் 3ம் பாகத்தில் முக்கியமான காட்சிகள் உள்ளன என்றும் இது அதற்கான லீடு தான் என்றும் சொல்லப்பட்டது. தொடர்ந்து படத்தைப் பற்றி ட்ரோல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதை ஷங்கரே எதிர்பார்க்கவில்லை என்றார்.
கமல், ஷங்கர் காம்போவின் இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு கொஞ்சம்கூட இல்லாமல் போனது. அதன்பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வந்த வேட்டையன் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ஊடகங்களில் பேட்டி கொடுத்தது வைரலானது. அதனால் அவரும் ட்ரோலில் சிக்கி விட்டார். குறிப்பாக திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியானதைத் தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க, 'அப்படியா... ஓ மை காட்...' என எதுவும் தெரியாதது போல பேசியிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அது போதாது என்று 'விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?' என கேட்டதற்கு 'வாழ்த்துக்கள்' என்று சொல்லி விட்டார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் விஜயகாந்த் இறந்து ஒரு வருடமாகி விட்டது என விளக்கம் கொடுத்ததும் 'ஓஹோஹோ' என்று சமாளித்து சோகமான முகத்தைக் காட்டி ட்ரோலில் சிக்கி விட்டார்.
கங்குவா
சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா படத்திற்கு ஞானவேல்ராஜா கொடுத்த ஹைப் ரசிகர்களை எப்படியாவது படம் பார்க்க வைத்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இந்தப் படம் 2000 கோடியை வசூலிக்கும் என்றார். ஆனால் படம் வெளியாகி பிளாப் ஆனது. இது ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ட்ரோலில் சிக்க வைத்து விட்டது.
திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் இந்தப் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து 2 வாரங்களுக்குப் பிறகுதான் படத்தின் விமர்சனத்தைக் கொடுக்க வேண்டும். அதற்காக தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யூடியூபர்கள் யாரையும் தியேட்டர் வாசலுக்குள் வந்து பப்ளிக் ரிவியு எடுக்க அனுமதிக்கக்கூடாது என்றெல்லாம் போர்க்கொடி தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்
தளபதி விஜய் சினிமாவில் கோட் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தார். ஆனால் அரசியலில் சில விஷயங்களில் கோட்டையை விட்டுவிட்டார். குறிப்பாக பனையூரில் வெள்ள நிவாரணப் பொருள்கள் கொடுக்கிறோம் என பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரடியாகச் செல்லாமல் மக்களை அவரது அலுவலகத்திற்கே வரவழைத்தார். இது என்ன 'வொர்க் ஃப்ரம் ஹோமா' என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.