×

ரீவைண்ட்ஸ்- ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் திரைப்படம் ஒரு பார்வை

பாண்டியராஜன், பல்லவி நடிப்பில் வெளிவந்த ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் திரைப்படம் ஒரு பார்வை
 
oorai therinjukitten

சினிகோ பிலிம்ஸ் சார்பாக 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் ரீலீஸ் ஆக போகி அன்றே  வெளிவந்த திரைப்படம்தான் ஊரை தெரிஞ்சுக்கிட்டேன். படத்தின் ஓப்பனிங் காட்சிகளிலேயே பாண்டியராஜன் தனது வழக்கமான குறும்புசேட்டைகளால் ரசிகர்களை கவர்வார்.மற்ற காட்சிகளும் பாண்டியராஜன் இயக்க பாணியிலேயே இருக்கும் அந்த காட்சிகளை பார்த்த கணத்திலேயே ஆஹா இது பாண்டியராஜன் இயக்கிய படமா என நிமிர்ந்து உட்கார்ந்த பார்வையாளர்களுக்கு பின்புதான் தெரியும் அது பாண்டியராஜன் படம் இல்லை கலைப்புலி ஜி சேகரன் இயக்கிய படம் என்று.

அதற்கு முன் கலைப்புலி ஜி சேகரன், யார் படத்தை கலைப்புலி தாணுவுடன் சேர்ந்து தயாரித்து இருந்தார். யார் படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலை அள்ளிக்கொடுத்தது.

oorai therunjukitten

தயாரிப்பாளராக இருந்த சேகரன் அதற்கு பின்பு பாண்டியராஜனை வைத்து முதல் முறையாக இயக்கிய படம்தான் ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் திரைப்படம். இந்த படத்தை கலைப்புலி ஜி சேகரன் இயக்கியதோடு மட்டுமல்லாமல் படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக கனமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மோசடிகளில் எவ்வளவு வகைகள் உண்டு என இப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பழைய பொருட்கள் விற்பனை ஏல மோசடி, கல்யாண வீட்டில் மொய் எழுதி மோசடி என அந்த நேரத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை பாண்டியராஜனை வைத்து நகைச்சுவையாக காட்சிப்படுத்தி இருந்தார் சேகரன்.

இதில் உச்சக்கட்டமாக பைத்தியங்களை பிடித்து பழைய பொருட்கள் ஏலம் எடுக்க சொல்லும் காமெடியும் அதன் பிறகு  5 நிமிடத்துக்கு மேல் வரும் சைக்கிள் சேஸிங் காமெடியும் 80ஸ் கிட்ஸ்கள் வயிறு குலுங்க ரசித்து சிரித்து பார்த்த காட்சிகளாகும். படம் வெளிவந்து 33 வருடங்களாகியும் இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இப்பட காமெடி காட்சிகள் நல்ல தீனி போட்டு கொண்டிருக்கிறது என்பது உண்மை.

இப்படத்தில் பாண்டியராஜன், செந்தில், சார்லி, சின்னி ஜெயந்த், கிங்காங், லூஸ் மோகன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நகைச்சுவை நடிகராக இன்று வரை சினிமாக்களில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் கிங்காங் இப்படத்தில்தான் அறிமுகமானார்.

பாண்டியராஜனுக்கு ஜோடியாக பல்லவி நடித்திருந்தார்.

வில்லன் கெட் அப்பில் பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் ஏற்காடு சுப்ரமணியன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். ஜெய்சங்கர், எஸ்.எஸ் சந்திரன் உள்ளிட்டோர்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தகப்பன் எங்கிருக்கிறார் என சொல்லாமலேயே பாண்டியராஜனின் சிறு வயதிலேயே உயிரை விடும் தாய், அனாதை என்பதால் உறவினர்களால் துரத்தப்பட்ட பாண்டியராஜன் மோசடிகள் செய்து தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறார் . ஒரு கட்டத்தில் மோசடிகள் செய்த குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார் அங்கு தான் சந்திக்க நினைத்த தந்தையும், தூக்கு தண்டனை கைதியாக இருப்பதை அறிகிறார். பின்பு தங்கை கணவரும் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றத்துக்காக அவர் இருக்கும் ஜெயிலுக்கு வருகிறார். இந்த பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் மீண்டு தனது காதலி பல்லவியை இறுதியில் கரம்பிடிக்க படம் சுபம்.

படத்தின் ப்ளஸ்: அதுவரை தமிழ் சினிமாக்களில் பார்த்திராத வித்தியாசமான காமெடிகள்தான். 

படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சோடை போகாத தரமான பாடல்கள். குறிப்பாக எஸ்.பி.பி ஜானகி பாடிய சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் என்ற பாடல் நம்மை எங்கோ சொர்க்கத்திற்கு இழுத்து செல்லும்.

கே.ஜே ஜேசுதாஸ் பாடி இருந்த தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி என்ற பாடல் மிக மெல்லிய சோகப்பாடலாக அனைவரையும் கவர்ந்தது.

இந்த படத்தை முதன் முதலில் பார்த்த 80ஸ் கிட்ஸ் இப்படத்தை எத்தனை முறை டிவியில் ஒளிபரப்பினாலும் இன்றும் திரும்ப திரும்ப பார்ப்பதுதான் இப்படத்தின் சிறப்பு.

From around the web

Trending Videos

Tamilnadu News