பாலா மீது அஜித்துக்கு கோபமே இல்லையே!.. அருண் விஜயிடம் என்ன சொன்னார் தெரியுமா?...
Vanangaan: சேது, நந்தா, நான் கடவுள் போன்ற பேசப்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவின் சிஷ்யரான இவர் பல போராட்டங்களுக்கு பின் சேது படம் இயக்கினார். இந்த படத்தை வாங்க எந்த வினியோகஸ்தரும் முன்வரவில்லை. படத்தின் கிளைமேக்ஸ் டிராஜடியாக இருக்கிறது. கதாநாயகனும், கதாநாயகியும் சேர்வது போல காட்சியை அமையுங்கள் என சொல்ல தயாரிப்பாளர் ஏற்கவில்லை. படம் உருவாகி பல மாதங்களுக்கு பின்னரே படம் வெளியாகி ஹிட் ஆனது.
அதன்பின் சூர்யாவை வைத்து நந்தா படம் இயக்கினார். அடுத்து விக்ரம், சூர்யாவை வைத்து பிதாமகன் படத்தை இயக்கினார். அந்த படம் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றது. விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது. அதன்பின் அஜித்தை வைத்து பாலா துவங்கிய படம்தான் நான் கடவுள்.
பாலாவின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்த அஜித் உடல் எடையை குறைத்து, தாடி மற்றும் தலைமுடி வளர்த்து ஆளே மாறி பல மாதங்கள் காத்திருந்தார். ஆனால், பாலா படத்தை துவங்கவில்லை. எனவே, அந்த படத்திலிருந்து விலக முடிவெடுத்தார். இது பாலாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும் என பாலா தரப்பு அழுத்தம் கொடுக்க அஜித்தும் கோபத்தோடு எழுந்து போனார். அப்போது அஜித்தை பாலாவின் நண்பர் ஒருவர் அடித்ததாகவும் அப்போது செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி நடக்கவில்லை என சிலர் சொன்னார்கள்.
பாலா தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக அவரின் தயாரிப்பில் பி.வாசு இயக்கிய பரமசிவன் என்கிற படத்தில் நடித்து கொடுத்தார். இது நடந்த 20 வருடங்கள் ஆகப்போகிறது. அதன்பின் பாலாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவில்லை. அதோடு, விஜய் போன்ற எந்த பெரிய நடிகரும் பாலாவின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. ஒருபக்கம், படப்பிடிப்பு தளத்தில் பாலா மிகவும் டெரராக இருப்பார் என்கிற பேச்சும் எழுந்தது.
அஜித் போனதால் ஆர்யாவை வைத்து நான் கடவுள் படத்தை இயக்கி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வாங்கினார் பாலா. அதன்பின் அவர் இயக்கிய சில படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. இப்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அருண் விஜய் ‘வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது ஒரு நிகழ்ச்சியில் அஜித் சாரை சந்தித்தேன். அப்போது பாலா சாரின் இயக்கத்தில் நடிப்பதாக அவரிடம் சொன்னேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். ஷாலினி மேடமை அழைத்து ‘அருண் பாலா சார் இயக்கத்தில் நடிக்கிறார்’ என சொல்லி அவரிடம் தனது சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார். அவரின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என நானும் ஆர்வமாகவே இருந்தேன். எது நடந்தாலும் அது நல்லதே’ என பேசியிருந்தார்.
அருண் விஜய் சொல்வதை வைத்து பார்க்கும்போது அஜித் பழசையெல்லாம் மறந்துவிட்டார். அவருக்கு பாலா மீது இப்போது எந்த கோபமும் இல்லை என்றே கருதலாம்.