பரதேசி பட ஹீரோவுக்கு காஸ்டியூம் இதுதான்... அதான் பாலா படம்னாலே தெறிச்சி ஓடுறாங்களா...?
சேது படத்தில் விக்ரமை அப்படியே மாற்றி மனநோயாளி மாதிரி காட்டியிருப்பார் இயக்குனர் பாலா. இதுதான் அவரது முதல் படமும்கூட. அதே நேரம் அவருக்குத் தேவை கதை தான். அதற்காக கதாநாயகனை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவார். அதனால் பல தியாகங்களைக் கதாநாயகன் செய்ய வேண்டி இருக்கும்.
குறிப்பாக உடல் மெலிய வேண்டுமானால் அப்படி மாற வேண்டும். சகதியில் உருண்டு புரண்டு நடிக்க வேண்டுமானாலும் தயார் என்று சொல்ல வேண்டும்.
நான் கடவுள் படத்தில் ஆர்யாவை உண்மையான அகோரியாகவே மாற்றி இருந்தார். அதற்காக அவர் பல பயிற்சிகளை ரிஸ்க் எடுத்து செய்துள்ளார். நேரடியாக அகோரிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று எல்லாம் பார்த்ததாகச் சொன்னதுண்டு.
பிதாமகன் படத்தில் விக்ரமையும், சூர்யாவையும் வேறு லெவலில் காட்டி இருந்தார். வெட்டியான் வேடத்தில் விக்ரமை நடிக்க வைத்தார். சூர்யாவை பிளாட்பாரத்தில் லேகியம் விற்பவராக நடிக்க வைத்தார்.
அவன் இவன் படத்தில் விஷால், ஆர்யா இருவரையும் அப்படியே மாற்றி இருந்தார். மாறுகண் மாதிரி நடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் கஷ்டப்பட்டு நடித்து இருந்தார் விஷால்.
அதேபோல பரதேசி படத்தில் முரளியின் மகன் அதர்வாவை வேற ரேஞ்சுக்குக் கொண்டு போய்விட்டார். இப்படி எல்லாமா இவர் நடித்தார் என்று நம்மையே பரிதாபப்பட வைத்துவிட்டார். 2013ல் வெளியான இந்தப் படத்தில் அதர்வாவுடன் இணைந்து தன்ஷிகா, வேதிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
டீ எஸ்டேட்களில் தொழிலாளிகள் படும்பாட்டை தோலுரித்துக் காட்டியுள்ளது படம். ஜிவி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதர்வா என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...
பரதேசி படத்துக்கு லுக் டெஸ்டுக்கு வரச் சொன்னாங்க. நான் ஒரு கற்பனையோடு போனேன். முதலில் என்னை உட்கார வைத்து முடியை மெதுவாக வெட்டினாங்க. அப்புறம் ஒரு கோணிப்பையில் இருந்து காஸ்ட்யூம் எடுத்தாங்க. நான் எந்த மாதிரி காஸ்டியூம் இருக்கும்? ராஜா மாதிரி இருக்குமோ என்று கற்பனை செய்து கொண்டு இருந்தேன்.
அப்புறம் தான் தெரிஞ்சது என் காஸ்டியூமே அந்தக் கோணிப்பை தான் என்று. அப்புறம் என் மேல சேறு எல்லாம் பூசி ஒரு இடத்தில் வைத்து போட்டோ எடுத்தாங்க. என்னை அப்படியே மாத்திட்டாங்க... என்கிறார் அதர்வா.
பாலா தற்போது அருண்விஜய் நடிக்கும் வணங்கான் படத்தை இயக்கிக் கொண்டுள்ளார். இது பொங்கல் விருந்தாக (10.1.2025) திரைக்கு வர உள்ளது.