‘காக்க காக்க’ ஜீவன் உண்மையிலேயே இப்படி ஒரு வில்லத்தனமான ஆளா? புலம்பும் தயாரிப்பாளர்
காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜீவன். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அந்தப் படங்களும் வெற்றி அடைய இவருக்கு என ஒரு தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவானது.
இந்த நிலையில் நடிகர் ஜீவனை பற்றி பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கார் மூவிஸ் பாலாஜி பெரும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். பூவேலி, அமராவதி போன்ற படங்களை இயக்கிய செல்வாவை வைத்து ஒரு புதிய படத்தை எடுப்பதாக இருந்தாராம் பாலாஜி.
ஜீவன் மற்றும் பிரியாமணியை லீடு ரோலில் நடிக்க வைக்க அந்தப் படம் தான் தோட்டா. ஆனால் இந்த படத்தை ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார் பாலாஜி. முதலில் ஜீவனுக்கு இந்த படத்தில் சம்பளமாக மூன்று லட்சம் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பணமாக ஒரு லட்சம் தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்திற்கு பணம் தருவதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் உறுதியளிக்க அதை நம்பி பாலாஜியும் படத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பணம் கொடுக்காமல் இவரை ஏமாற்றியதாக பாலாஜி கூறினார். அதனால் வெளியில் சில பேரிடம் பைனான்ஸ் வாங்கி படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் தோட்டா திரைப்படம் பாதியிலேயே நின்று போக இயக்குனர் செல்வா ஜீவனை வைத்து நான் அவன் இல்லை திரைப்படத்தை எடுத்து பெரிய ஹிட் ஆக்கி இருக்கிறார். அதைத் தொடர்ந்து திருட்டுப் பயலே படத்திலும் ஜீவன் நடித்து அந்தப் படமும் ஹிட்டானது. இன்னொரு பக்கம் பிரியாமணி பருத்திவீரன் படத்தில் நடித்து அவரும் பெரிய அளவில் பிரபலமானார்.
இதனால் மீண்டும் செல்வாவை சந்தித்து பேசி இருக்கிறார் பாலாஜி. ஆனால் செல்வாவோ அந்தப் படத்தை மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது என படத்தை எடுக்க மறுத்து விட்டாராம். அது மட்டுமல்ல நடிகர் ஜீவனிடமும் செல்வா கலந்து பேசி அவரையும் இந்த படத்தில் நடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
அதாவது ஜீவனிடம் போய் பாலாஜி பேசும்போது ‘இரண்டு படங்கள் எனக்கு ஹிட் ஆகிவிட்டது. அதனால் இரண்டு கோடி சம்பளம் வேண்டும்’ என கேட்டு இருக்கிறார் ஜீவன். இது அவர் அந்த படத்தில் நடிக்காமல் இருப்பதற்காகத்தான் அவ்வளவு சம்பளத்தை ஜீவன் கேட்டார் என பாலாஜி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதனால் மனம் நொந்து போன பாலாஜி தயாரிப்பாளர் சங்கத்திடம் செல்வாவின் மீதும் ஜீவன் மீதும் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கம் சேர்ந்து பேசி ஒரு முடிவு எடுத்து ஜீவனுக்கு 30 லட்சம் சம்பளமும் செல்வாவுக்கு 15 லட்சம் சம்பளமும் பேசி இந்த படத்தை எடுக்க வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இவ்வளவு தூரம் கொண்டு போய் நிறுத்தி விட்டாரே என்ற கோபத்தில் செல்வாவும் ஜீவனும் சேர்ந்து தோட்டா திரைப்படத்தின் செலவை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் ஒன்றரை கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் கடைசியில் நான்கு கோடி பட்ஜெட்டில் முடிந்திருக்கிறது. அதற்கு காரணம் செல்வாதான் என பாலாஜி கூறினார். படம் நல்ல அளவில் போனாலும் இந்த படத்தால் ஒரு கோடி எனக்கு நஷ்டமானது என பாலாஜி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.