விஜய் எனக்கு க்ளோஸ்தான்!. ஆனா அவர் பின்னாடி போகாதீங்க!. அட அவரே சொல்லிட்டாரே!..

Vijay TVK: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் சினிமாவுக்கு வந்தவர்தான் விஜய். சினிமாவில்தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடிக்க வந்தார். நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் அறிமுகமானார். படம் ஓடவில்லை. எனவே, கவர்ச்சியை கையில் எடுத்த எஸ்.ஏ.சி அடுத்து ரசிகன் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் ஹிட் அடித்தது.
பூவே உனக்காக படம் மூலம் டேக் ஆப் ஆகி சினிமாவில் விஜய் வளர துவங்கினார். ஒருகட்டத்தில் வசூல் மன்னனாகவும் மாறி பல ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறினார். ஒருகட்டத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார்.
சினிமாவில் உச்ச நடிகர்: அவருக்கு 200 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் அவரின் படங்கள் 500 கோடி வசூலை பெறுகிறது. ஆனால், சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி மாநாட்டையும் வெற்றிகரகமாக நடத்தி காட்டினார்.

இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என சொல்லப்படுகிறது. விஜயின் அரசியல் வருகை சில அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி 10 சதவீத ஓட்டு வாங்கும் எனவும் சிலர் சொல்கிறார்கள்.
பனையூர் அரசியல்வாதி: அதேநேரம், ரசிகர்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதாது. மக்கள் வாக்களித்தால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும் என்கிற விமர்சனமும் இருக்கிறது. இந்த விமர்சனங்கள் எதையும் விஜய் கண்டுகொள்வதில்லை. ஒருபக்கம், கட்சியை துவங்கி இத்தனை மாதம் ஆகியும் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட விஜய் நடத்தவில்லை. மக்கள் பிரச்சனை குறித்து எந்த போராட்டத்தையும் அவர் நடத்தவில்லை. பனையூர் அரசியல்வாதி என மக்கள் அவரை கிண்டலடிக்கும் வகையில்தான் அவரின் அரசியல் நடவடிக்கை இருக்கிறது.

இந்நிலையில், பல படங்களில் நடித்தவரும், விஜயுடன் ஜில்லா படத்தில் நடித்தவருமான நடிகர் ஜோ மல்லூரி விஜயின் அரசியல் வருகை பற்றி கருத்து தெரிவித்தபோது ‘நான் விஜயுடன் நெருக்கமானவன். ஆனாலும் உங்களிடத்தில் சொல்கிறேன். இளைஞர்களே!. தயவு செய்து எந்த நடிகரின் பின்னாலும் போய்விடாதீர்கள். இந்த சமூகத்திற்கு ஒரு புதிய தலைவன் உருவாகிறான் என்றால் அது நடிகனாக இருகக்கூடாது. இந்த தலைமுறை அறிவாளிகள் பின்னால் போக வேண்டும்’ என பேசியிருக்கிறார்.